ஜெனீவா தீர்மானம் தொடர்பில் அரசின் பாரதூரமான முடிவு!! இலங்கை அரசாங்கத்திற்கு நினைவுபடுத்தப்படும் விடயம்..!

ஐ.நாவின் 30/1ஆம் இலக்க தீர்மானம் தான் மஹிந்த ராஜபக்சவை மின்சாரக் கதிரையில் இருந்து பாதுகாத்தது என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர நினைவுப்படுத்தியுள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும் போது
மஹிந்த அரசின் இறுதி காலகட்டத்தில் எமது இராணுவம் மற்றும் தலைவர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.தன்னை மின்சாரக் கதிரைக்குக் கொண்டு செல்லப்போகின்றார்கள் என்று மஹிந்த ராஜபக்சவே அன்று தெரிவித்து வந்தார்.எனினும், நல்லாட்சியில் இந்த 30/1 தீர்மானம் மூலம்தான் மஹிந்த ராஜபக்சவை மின்சாரக் கதிரைக்குக் கொண்டு செல்லாமல் தடுத்தோம்.அதேபோன்று வெளிநாட்டு விசாரணையாளர்கள் எமது நாட்டுக்குத் தேவையில்லை, எங்களால் விசாரணை மேற்கொள்ள முடியும் என எங்களால் ஜெனிவாவுக்குத் தெரிவிக்க முடிந்தது.
அதுமட்டுமன்றி எமது பிரச்சினைகளில் இருந்து சர்வதேசத்தை தூரமாக்கி வைத்திருந்தோம். அதேவேளை, சர்வதேசத்துக்கு மதிப்புக் கொடுத்தும் நடந்தோம்.இந்தநிலையில், ஜெனிவாத் தீர்மானம் குறித்து இந்த அரசு எடுத்துள்ள முடிவு பாரதூரமானது. சர்வதேச மட்டத்தில் இலங்கையைத் தனிப்படுத்தப்படுத்தும் நடவடிக்கைகளையே இந்த அரசு மேற்கொண்டு வருகின்றது.எனவே, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையில் இருந்து விலகுவதற்கு அரசு எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.