சாத்தியமான பாடசாலைகளில் உயர்தர மாணவர்களின் கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்

வி.சுகிர்தகுமார்
மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை ஆரம்பிக்கும் முகமாக பொருத்தமான நோய்தொற்று இல்லாத பிரதேசங்களின் பாடசாலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்தில் உள்ள சாத்தியமான பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளதுடன் முதற்கட்டமாக உயர்தர மாணவர்களின் கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன் ஒரு கட்டமாக திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை உயர்தர மாணவர்களின் பெற்றோர்களை தெளிவூட்டும் கருத்தரங்கு இன்று பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் கே.சுமன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் கலந்து கொண்டு பெற்றோர்களுக்கான விழிப்பூட்டல் கருத்துக்களை வழங்கினார்.
பாடசாலைகள் திறக்கப்படாமையினால் மாணவர்கள் எதிர்கொண்டுள்ள கல்வி ரீதியான பின்னடைவுகள், மற்றும் தாக்கங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
ஆகவே மிகவும் பாதுகாப்பான முறையில் உரிய விதிமுறைகளை கடைப்பிடித்து பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவேண்டியதன் அவசியம் பற்றியும் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
இதேநேரம் அக்கரைப்பற்று அலையடிவேம்பு கல்வி கோட்டத்திற்குட்பட்ட ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மற்றும் ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயம் , கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளதுடன் முதற்கட்டமாக உயர்தர மாணவர்களின் கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.