சமுர்த்தி வங்கிகளை மையமாக கொண்டு 957 சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் ஊடாக உலர் உணவு பொதிகளையும் வழங்க நடவடிக்கை

வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டம் கொரோனவின் தாக்கத்திற்குட்படாமல் பாதுகாப்பாக இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என தெரிவித்த அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க இதற்காக பாடுபட்டுழைக்கும் அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தார்.
அம்பாரை மாவட்டத்தின் நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் அம்பாரை மாவட்டத்தினை பாதுகாப்பாக வைத்துள்ளமைக்காக சுகாதார துறைக்கு விசேடமாக நன்றி தெரிவிக்கின்றேன். அத்தோடு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு நன்றியை தெரிவிக்கி;ன்றேன். அத்தோடு பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிசாருக்கும் நன்றியை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இதேநேரம் பூரண ஒத்துழைப்பை வழங்கி வரும் பிரதேச செயலாளர்கள் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிப்பதோடு கிராம மட்டத்திலான அவர்களது கண்காணிப்பே அம்பாரை மாவட்டம் கட்டுப்பாட்டினுள் இருப்பதற்கு காரணம் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
மேலும் எதிர்காலத்தில் மாவட்டத்தை பூரண கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதற்கு முப்படை மற்றும் பொலிஸ் உட்பட சுகாதாரத்துறையினரும் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளோம்.
மாவட்டத்தில் உணவு தட்டுப்பாடில்லாமல் பேணுவதற்கு மாவட்ட மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் கலந்துரையாடி பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்கள் மூலமாகவும் விசேடமாக மக்களின் அத்தியாவசிய உணவு தேவையினை நிறைவு செய்யும் பொருட்டு சத்தோச நிலையங்கள் ஊடாக சமுர்த்தி வங்கிகளை மையமாக கொண்டு 957 சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் ஊடாக உலர் உணவு பொதிகளையும் வழங்கி வைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்றார்.
மேலும் உணவுப்பொருட்களை மக்களின் காலடிக்கு கொண்டு சேர்ப்பதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளோம். இதன் மூலம் மக்களின் உணவுத்தட்டுப்பாட்டினை நீக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
பல வர்த்தகர் சங்கங்களும் இது தொடர்பில் எங்களுடன் கலந்துரையாடி இப்பணிகளை முன்கொண்டு செல்வதற்கு தயாரகியுள்ளதுடன் கிராம மட்டத்தில் நடமாடும் சேவையினை வழங்கவும் முன்வந்துள்ளனர்.
மற்றும் அம்பாரை மாவட்டத்தில் உணவுத்தட்டுப்பாடுகள் ஏதும் ஏற்படவில்லை எனவும் பாதுகாப்பான முறையில் அந்நிலை பேணப்படுவதாகவும்; பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட மட்டத்திலும் அனைத்து தரப்பினர்களும் ஒன்றினைந்து கலந்துரையாடி பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதேநேரம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவி செய்கின்றவர்கள் பிரதேச செயலகத்தினூடாக பிரதேச செயலாளரின் அனுமதியை பெற்று வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.