சச்சித்ர சேனநாயக்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான சச்சித்ர சேனநாயக்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இலங்கை அணிக்காக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள சச்சித்ர சேனநாயக்க, இதுவரை 49 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 53 விக்கெட்டுக்களையும், 24 டி20 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.
34 வயதான இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அவுஸ்ரேலிய அணிக்கு எதிராக கொழும்பில் நடைபெற்ற டி20 போட்டியில் இறுதியாக இலங்கை அணிக்காக விளையாடியிருந்தார்.
சர்வதேசப் போட்டிகளில் கடந்த 3 வருடங்களாக விளையாடாத அவர், கொழும்பு SSC அணிக்காக விளையாடி வந்ததுடன், கடந்த பருவகாலத்தில் அந்த அணியின் தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.
அத்துடன், 2018/2019 பருவகாலத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டித் தொடரில் சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் சிறந்த சகலதுறை வீரருக்கான விருதுகளையும் இவர் பெற்றுக்கொண்டார்.
2012ஆம் ஆண்டு ஐ.சி.சிஇன் விதிமுறைகளுக்கு முரணாக முறையற்ற விதத்தில் பந்துவீசுவதாக சச்சித்ர சேனநாயக்க குற்றம்சுமத்தப்பட்டார்.
எனினும், அந்த தடையிலிருந்து அவர் மீண்டும் திரும்பி இலங்கை அணிக்காக விளையாடியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அத்துடன், 2014 இல் இலங்கை அணி ஐ.சி.சி இன் டி20 உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த வீரர்களில் சச்சித்ர சேனநாயக்கவுக்கு முக்கிய இடமுண்டு.
இதேநேரம், 2014 இல் இங்கிலாந்துடன் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஜோஸ் பட்லரை மேன்கட் முறையில்வீழ்த்தி சச்சித்ர சேனநாயக்க சர்ச்சையை ஏற்படுத்தியருந்தார்.
எனினும், அந்தப்போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டியது. சர்வதேச ரீதியாக ஒருசில டி20 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், தனது ஓய்வு முடிவு குறித்து சச்சித்ர சேனநாயக்க வெளியிட்ட விசேட அறிக்கையில், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாகவும் இதற்கான அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.