கோவிட் பற்றி ஊடகங்களிடம் கூறும் முன்னர் என்னிடம் கூறுங்கள்! – ஜனாதிபதி

அரச அதிகாரி மற்றும் ஏனைய பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் தேவையற்ற வகையில் ஊடக சந்திப்புகளை நடத்தி கோவிட் குறித்து மக்களுக்கு தேவைற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது எனவும், ஏதேனும் பிரச்சினை அல்லது சிக்கல் இருந்தால், அது குறித்து நேரடியாக தனக்கு அறிவிக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதுவரை தான் எடுத்த தீர்மானங்கள் , எதிர்காலத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் என்பன விசேட மருத்துவர்களின் ஆலோசனைக்கு அமைய எடுக்கப்படும் எனவும் மக்களுக்காக எந்த தீர்மானங்களையும் எடுக்க தயங்க போவதில்லை எனவும், ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று கோவிட் தடுப்பு செயலணிக்குழுவின் அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
பயணக் கட்டுப்பாடுகளின் போது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க சுகாதாரத் துறையினர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது மக்களின் பொறுப்பும் ,கடமையுமாகும்.
கோவிட் தொற்றை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் மக்களும் பொருளாதாரமும் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், எவ்வித குறையுமின்றி நடமாடும் சேவைகள் மூலம் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் பவித்ரா வன்னியராச்சி, காமினி லொக்குகே, ஜோன்ன்ஸ்டன் பெர்னாண்டோ, பந்துல குணவர்தன, நமல் ராஜபக்ச, ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரனதுங்க , ரோஹித அபேகுணவர்தன, ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, இராணுவ தளபதி சவேந்திர சில்வா பாதுகாப்பு தரப்பினர் பிரதானிகள் மற்றும் சுகாதார துறையின் பிரதானிகளும் கலந்து கொண்டுள்ளனர்.