கொரோனாவின் பிறப்பிடம் வழமைக்கு திரும்பியது!

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தோற்றம் பெற்ற, சீனாவின் வுஹான் நகரம் இன்று சனிக்கிழமை முதல் வழமைக்கு திரும்பியுள்ளது.
நகரங்களுக்கிடையிலான மெட்ரோ ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பித்தல், மாகாணங்களுக்கிடையிலான எல்லைகளை மீளத்திறத்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களை மீள ஒன்றிணைய அனுமதி வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை இன்று சனிக்கிழமை அனுமதிப்பதன் மூலம் குறித்த நிலையினை சீனா எட்டியுள்ளது.
இதனை தொடர்ந்து, இரண்டு மாதங்களாக வுஹான் நகருக்குள்ளேயே முடக்கப்பட்டிருந்த மக்கள் முகக் கவசங்களை அணிந்தவாறு முதல் முறையாக வெளி இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சீனாவில் பரவ ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரம் எவ்விதமான வெளி தொடர்புகளும் இல்லாத வகையில் முற்று முழுதாக முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.