கருணாவை பார்த்து பயம் வந்துவிட்டது என்பது உண்மைதான் – கோடீஸ்வரன் எம்.பி

முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனைப் பார்த்து பயம் வந்துவிட்டது என்பது உண்மைதான் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
கல்முனையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்டத்திற்கு தற்போது வந்து நீலிக்கண்ணீர் வடிக்கும் கருணா பிரதி அமைச்சராக இருந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்திற்கு என்ன செய்திருக்கிறார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் பற்றி ஒரு வார்த்தைகூட பேசியிருக்கிறாரா? ஒரு நாளாவது கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்திக் கொடுக்கவேண்டியது குறித்து பேசியிருக்கிறாரா? அந்த நேரம் வாய்மூடி மௌனியாக இருந்தவர் தற்போது அம்பாறை மாவட்டத்தில் மக்களை சிதைத்து சின்னாபின்னமாக்க முற்படுகின்றார்.
கருணா அமைச்சராக இருக்கும் போதும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதுவும் செய்யவில்லை.
எங்களது தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அலிசாஹிர் மௌலானா உடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தை உடைத்தவர் என்பதை தமிழ் மக்கள் மறந்து விடவில்லை அவ்வாறான ஒருத்தர் இங்கே வந்து முஸ்லிம்களைப் பற்றி கதைக்கின்றார்” என மேலும் தெரிவித்தார்.