ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் முதல் முறையாக தமிழில் வர்ணனை: புதிய செய்திகளின் தொகுப்பு

இந்தியாவில் நடைபெறும் ரி-20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். தொடரின், 13ஆவது அத்தியாயத்திற்கான தயார்படுத்தல்கள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கிய ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடர், கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்தியாவில் சிறந்த உள்ளூர் வீரர்களை இனங்காண்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இத்தொடர், சர்வதேச வீரர்களின் வருகையால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதற்கமைய ஐ.பி.எல். தொடரின், 13ஆவது அத்தியாயத்திற்காக தற்போது ஒவ்வொரு அணிகளும் தங்களின் அணிகளை வலுப்படுத்தும் வகையில், புதிய பயிற்சியாளர்களை நியமிப்பதோடு, திறமையான வீரர்களுக்கும் வலைவிரிக்கின்றன.
2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர் ஏப்ரல் மற்றும்; மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இத்தொடர் ஏலம் எப்போது நடக்கும், எத்தனை மணிக்கு நடக்கும், எத்தனை வீரர்கள் பங்கேற்பார்கள் என்பது குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னைய ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் அனைத்தும் பெங்களூருவில்தான் நடந்தது. ஆனால், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின்; புதிய தலைவர் கங்குலி பதவி ஏற்றுள்ளதையடுத்து இந்த முறை ஏலம் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன்படி வரும் 19ஆம் திகதி ஐ.பி.எல். ஏலம் நடைபெறவுள்ளது
முதலில் திட்டமிட்டபடி ஏலம் 19ஆம் திகதி காலையில் நடப்பதாக இருந்தது. ஆனால், இரசிகர்கள் அதிகமானோர் ஏலத்தைக் கண்டுகளிக்க வேண்டும் என்பதற்காக ஐ.பி.எல் ஏலத்தின் நேரம் காலை 10 மணிக்குப் பதிலாக பிற்பகல் 2.30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது.
வழக்கமாக வீரர்கள் ஏலம் குறித்த அறிவிப்புகள் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே வர்ணனை செய்யப்படும். ஆனால், முதல் முறையாகப் பிராந்திய மொழிகளாகத் தமிழ், தெலுங்கு, வங்காளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நேரலை வர்ணனை செய்யப்பட உள்ளது.
இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 8 அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதில் ஏலத்துக்காக வெளிநாடு, உள்நாடு என மொத்தம் 971 வீரர்கள் தங்களைப் பதிவு செய்திருந்தார்கள். ஆனால், இதில் 332 பேர் மட்டுமே ஏலத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஐபிஎல் போட்டியில் ஏற்கெனவே விளையாடிய அனுபவம் உடைய 19 இந்திய வீரர்கள், 24 புதிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் மேற்கிந்திய தீவுகள் வீரர் கேஸ்ரிக் வில்லியம்ஸ், பங்களாதேஷ் அணித்தலைவர் முஷ்பிகுர் ரஹிம், அவுஸ்ரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் சம்பா ஆகியோர் முதல் முறையாக இடம் பெறுகிறார்கள்.
8 அணிகளிலும் தற்போது 73 வீரர்களுக்கான காலியிடங்கள் இருக்கின்றன. இதில் அதிகபட்சமாக 29 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெறுவார்கள்.
இந்திய வீரர்களைப் பொறுத்தவரை கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ரொபின் உத்தப்பாவுக்கு அதிகபட்சமாக 1.5 கோடி ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல ஐ.பி.எல். போட்டிகளாகக் கோடிக்கணக்கான விலைக்கு ஏலம் போன ராஜஸ்தான் வீரர் ஜெய்தேவ் உனட்கட்டின் அடிப்படை விலை 1 கோடி ரூபாய்யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த முறை 8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
வெளிநாட்டு வீரர்களைப் பொறுத்தவரை அவுஸ்ரேலிய வீரர் மேக்ஸ்வெலுக்கு அடிப்படை 2 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது ஓய்வில் இருப்பதால் அவர் இத்தொடரில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தவிர பெட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட், மிட்ஷெல் மார்ஷ், டேல் ஸ்டெயின், மெத்தியூஸ் ஆகியோரின் விலையும் 2 கோடி ரூபாய்யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக ஆரோன் பிஞ்ச், கிறிஸ் லின், ஜேஸன் ரோய், மோர்கன், ரொபின் உத்தப்பா ஆகியோர் முதல் கட்டமாக ஏலத்தில் அனுப்பப்படுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மோர்கன், ஜேஸன் ரோய்க்கு அதிகமான மவுசு இருக்கும்.
அதன்பின் 2ஆவது கட்டத்தில் மேக்ஸ்வெல், கிறிஸ் மோரிஸ், பெட் கம்மின்ஸ் அதைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் ஏலம் விடப்படுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகபட்சமாக கொல்கத்தா அணி 11 வீரர்களை ஏலம் எடுக்க உள்ளது. அந்த அணியின் கைவசம் 35.65 கோடி ரூபாய் உள்ளது. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியிடம் 29 கோடி ரூபாய் கைவசம் உள்ளது. அந்த அணி 11 வீரர்களை ஏலம் எடுக்க உள்ளது. ரோயல் சேலஞ்சர்ஸ் வசம் 28 கோடி ரூபாய் உள்ளது. அந்த அணி 12 வீரர்களை ஏலம் எடுக்க உள்ளது.
2021ஆம் ஐ.பி.எல். ஏலத்தில் அனைத்து அணிகளும் 5 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டு இதர வீரர்களை ஏலத்தில் மட்டுமே தேர்வு செய்யமுடியும். இதனால் இந்த வருட ஐ.பி.எல். ஏலம் முக்கியத்துவம் பெறுகிறது.
அடுத்த வருடப் பெரிய ஏலத்தை மனத்தில் கொண்டு இந்த வருட ஏலத்தில் வீரர்களை அணிகள் தேர்வு செய்யவுள்ளன.
அடுத்த ஆண்டு அவுஸ்ரேலியாவில் ரி-20 உலகக்கிண்ண தொடர் நடைபெறவுள்ளதால், எதிர்வரும் ஐ.பி.எல். தொடர் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
கடந்த 12ஆவது ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை 8.40 கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எடுத்தது. அதேவிலைக்கு, ஜெய்தேவ் உனத்கட்டை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
இவர்கள் இருவரும் தான், கடந்த ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலை போனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 12 ஐ.பி.எல். தொடர்களில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் சம்பியன் பட்டத்தை வென்றதே கிடையாது.
ராஜஸ்தான் றோயல்ஸ், டெக்கன் சார்ஜஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் தலா ஒருமுறையும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மூன்று முறையும், கொல்கத்தா அணி இரண்டு முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறையும் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளன.



