எதிர்காலத்திலும் மக்கள் தன்னுடன் இணைந்திருப்பர் -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நம்பிக்கை

வி.சுகிதாகுமார்
கடந்த நான்கரை வருடங்களாக தமக்கு ஒத்துழைப்பை வழங்கிய அம்பாரை மாவட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்த அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் எதிர்காலத்திலும் மக்கள் தம்முடன் இணைந்திருக்க வேண்டும் எனவும் அந்த நம்பிக்கை தனக்குள்ளதாகவும் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினரின் அக்கரைப்பற்றில் உள்ள அலுவலகத்தில்; இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியும் பொது ஜன பெரமுன தமிழ் மக்களை மாத்திரமல்ல அனைத்து இலங்கை மக்களையும் காலா காலத்துக்கு ஏமாற்றி வருகின்றனர் பூகோளவியல் ரீதியாக தமிழ் மக்கள் பல பிரச்சினைகளை அம்பாறை மாவட்டத்தில் எதிர்நோக்கி வருகின்றனர். இங்கு வாழும் தமிழர்களின் இருப்பு சார்ந்த விடயங்களின் எனக்கு மாத்திரமல்ல அனைத்து அம்பாறை மாவட்ட மக்களுக்குமே பொறுப்புடையவர்கள்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில்; ஏனைய மாவட்டங்களை விட அம்பாறை மாவட்டத்தின் மக்களுக்கு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாக எமது பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிட்டால் பூர்வீகத்தை இழக்க நேரிடும் நிலங்களை பறிகொடுக்க நேரிடும் நமது கலை கலாச்சார விடயங்களிலும் ஏனைய சக்திகளின் தலையீடு இருக்கும்.
இன்று அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த்தேசியத்தை சிதைக்க தேசிய, சர்வதேசரீதியில் பல சக்திகள் உள்நுழைந்திருக்கின்றன அந்த சக்திகளின் மூலம் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறு நடைபெற்றால் அம்பாறை மாவட்டத்திற்கு தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடுவதுடன் அம்பாரை மாவட்ட மக்கள் விரட்டியடிக்கப்படும் சந்தர்ப்பம் உருவாகும் எனவும் கூறினார். ஆகவே அம்பாரை மாவட்ட மக்கள் நிதானமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பேரினவாத சக்திகளின் கைக்கூலிகளாக இருக்கும் சிலர் இங்கு ஊடுருவி இருக்கின்றனர் இவர்களுக்கு தமிழ் மக்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் இது ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கின்ற பொறுப்பும் கடமையுமாகும் எனவும் குறிப்பிட்டார்.
பட்டதாரிகள் நியமனத்தை பொறுத்தவரை தேர்தல்கள் ஆணையாளர் தடுத்து நிறுத்துவார் என்று அரசுக்கு தெரியும் . தெரிந்திருந்தும் நியமனத்தை வழங்கி பட்டதாரிகளை ஏமாற்றியுள்ளது. கடந்த காலத்தில் கூட ஐக்கிய தேசிய கட்சியும் வேலைவாய்ப்பு நியமனங்களை தேர்தல் காலத்தில் வழங்கி இவ்வாறு ஏமாற்றி இருந்தது .ஐக்கிய தேசிய கட்சியும் பொது ஜன பெரமுனவும் தமிழ் மக்களை மாத்திரமல்ல அனைத்து இலங்கை மக்களையும் காலா காலத்துக்கு ஏமாற்றி அவமானப்படுத்துகிறார்கள் என்றார்.
இதேபோன்றுதான் மூன்றே நாட்களில் பொது ஜன பெரமுன தலைமையிலான ஆட்சி அமைந்தால் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் என தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கூறப்பட்டது அதனை அவர்களின் கைக்கூலியான கருணாவும் வலியுறுத்தினார் ஆனால் அவை இன்றுவரை நிறைவேற்றப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் நான்கரை வருடகாலமாக அம்பாறை மாவட்ட மக்களின் நலன் சார்ந்த விடயங்களில் தோளோடு தோள் கொடுத்து உரிமை சார்ந்த விடயங்களில் என்னோடு கை கொடுத்த அனைவருக்கும் நன்றியினை தெரிவித்திருந்தார்.



