இரத்தக்கறை படிந்தவர்கள் ஆட்சி பீடம் ஏறும் யுகம் உருவாகக் கூடாது – கோடீஸ்வரன்

மக்களைக் கொன்று புதைத்து இரத்தக்கறை படிந்தவர்கள் ஆட்சி பீடம் ஏறும் யுகம் உருவாகக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏழை மக்களோடு மக்களாக செயற்படுகின்ற அனைத்து மக்களையும் சரியாகப் பார்க்கின்ற சிறந்த வேட்பாளர் எமக்கு கிடைத்திருக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காரைதீவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாப்பாகவும், சிறுபான்மை மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினையை மிக இலகுவாக கையாள்பவராகவும் இருக்க வேண்டும்.
வேட்பாளர்களாக வருகின்ற போது பல வாக்குறுதிகளை மக்களிடையே அள்ளி வீசுகின்றார்கள். பின்னர் வீசப்பட்ட வாக்குறுதிகள் காலம் கடந்து மரணித்துப் போகின்றன.
கடந்த காலங்களிலே எங்களுடைய மக்களை கொன்று புதைத்து இரத்தக்கறை படிந்தவர்கள் வேட்பாளராக வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட வேட்பாளர்களை எமது சமூகம் ஆதரிப்பார்களாயின் மீண்டும் ஒரு இருண்ட யுகத்துக்கு தள்ளப்படுவார்கள்.
இறுதி யுத்தத்தில் இலட்சக் கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக நிலத்துக்கு உள்ளே புதைக்கப்பட்டார்கள். இவற்றுக்கெல்லாம் காரணமானவர்கள் மீண்டும் ஆட்சி பீடம் ஏறும் யுகம் உருவாக் கூடாது.
ஏழை மக்களோடு மக்களாக செயற்படுகின்ற அனைத்து மக்களையும் சரியாக பார்க்கின்ற சிறந்த வேட்பாளர் எமக்கு கிடைத்திருக்கின்றார். அவரை நாங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும். தமிழ் மக்கள் சரியான நேரத்தில் சரியான பாடத்தைப் புகட்டி வேட்பாளரை வெற்றியடையச் செய்வார்கள்” என அவர் தெரிவித்தார்.



