இலங்கை

இன்றைய நாளுக்கான பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி களுவாஞ்சிக்குடியில் நிறைவு!!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் இன்றைய நாளுக்கான பேரணி மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நிறைவுபெற்றுள்ளது என சிவில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். குறித்த பேரணி மட்டக்களப்பு, தாழங்குடா பிரதேசத்தில் இருந்து நாளை மீண்டும் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தமிழினத்திற்கு நீதிகோரிய, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான ஆர்ப்பாட்டம் இன்று காலை ஆரம்பமாகிபல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இடம்பெற்று வந்தது. பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் தடைகளையும் மீறி பொத்துவிலில் இருந்து ஆரம்பமான போராட்டம் இன்று மாலை மட்டக்களப்பில் நிறைவடைந்தது.

வடகிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து நடாத்திய பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம் எழுச்சியுடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இன்று காலை 10.00 மணிக்கு பொத்துவில் நகரில் ஆரம்பமான மேற்படி போராட்டமானது அம்பாறை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் தடைகளைத் தாண்டி மட்டக்களப்பினை வந்தடைந்துள்ளது.

இந்த போராட்டத்தின் போது தடையுத்தரவு பெறப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக மற்றும் ஊடகவியலாளர்களின் பெயர்களை அடையாளப்படுத்தி போராட்டத்திற்கு சென்றவர்களை பல இடங்களில் பொலிஸ் தடைகளை ஏற்படுத்திய,

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற தடையுத்தரவினை காண்பித்து ஆர்ப்பாட்ட பேரணியை தடுத்து நிறுத்தி கலைந்து செல்லுமாறு கூறியபோது பேரணியில் சென்றவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலையேற்பட்டது.

இதன்போது பேரணியில் சென்றவர்களின் பதாகைகளை கிழித்தெறிந்ததுடன், பேரணியில் சென்றவர்கள் மீது தா.க்.கு.த.ல் நடாத்துவதற்கும் முற்பட்டபோதிலும் அவற்றினையெல்லாம் தாண்டி துணிச்சலுடனும், எழுச்சியுடனும் பேரணி மட்டக்களப்பு நோக்கி சென்றது.

பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் தடைகளை ஏற்படுத்திய போதிலும் அவற்றினையும் தாண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொத்துவிலில் தொடங்கிய பேரணியானது தாண்டியடி, கோமாரி, திருக்கோவில், தம்பிலுவில், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, பாலமுனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, பாண்டிருப்பு, பெரியகல்லாறு ஊடாக களுவாஞ்சிகுடியை சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து பேரணியானது தாழங்குடாவினை சென்றடைந்தது.

இந்த பேரணியானது பொத்துவிலில் இருந்து தாழங்குடா வரையில் சுமார் 100 கிலோ மீற்றர் பயணம் மேற்கொண்டு மட்டக்களப்பினை வந்தடைந்தது.

தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடகிழக்கு பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல்கள், பாரம்பரிய இந்து ஆலயங்களை அழிக்கும் செயற்பாடுகள், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்கள குடியேற்றங்கள்,

முஸ்லீம் மக்களின் ஜனாசாக்களை எரிப்பது, தமிழ் முஸ்லிம் அப்பாவி இளைஞர்கள் மீது ஏவி விடப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டம், சிறைகளில் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் என தமிழ் பேசும் மக்களின் தாயகத்தில் திட்டமிட்டு நடாத்தப்படும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.
இதன்போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களும் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையிலான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அட்டாளைச்சேனையில் முஸ்லிம்களும் இணைந்துகொண்டனர்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் ஆலையடிவேம்பில் இருந்து அட்டாளைச்சேனை ஊடாக மட்டக்களப்பு நோக்கி வருகை தந்த போது அதற்கு ஆதரவாக பெருமளவான முஸ்லிம்களும் இணைந்துகொண்டனர்.

முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நசீர், முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் ஹசன் அலி உட்பட பெருமளவான முஸ்லிம்கள் இதில் கலந்துகொண்டனர்.

அட்டாளைச்சேனை தொடக்கம் மருதமுனை வரையில் முஸ்லிம்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்ததுடன், சிறுபான்மை சமூகத்தின் உரிமையினை வலியுறுத்தும் வகையிலான கோசங்களையும் எழுப்பியுள்ளனர்.

இந்த போராட்டம் நாளை மட்டக்களப்பில் ஆரம்பமாகி திருகோணமலை, தென்னமரவாடியை சென்றடைந்து யாழ்ப்பாணம், பொலிகண்டியில் நிறைவடையவுள்ளதாக வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த போராத்தில் வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் மாவட்ட தலைவர்களான எஸ்.சிவயோகநாதன், வேலன் சுவாமிகள், அருட்தந்தை ரொஹான், அருட்தந்தை ரொமேஸ், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்,

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல்போனவர்களின் உறவினர்கள், பண்ணையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், கலையரசன் உட்பட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், உணர்வாளர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker