அம்பாறை மாவட்டத்தில் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் ; கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன – கவீந்திரன் கோடீஸ்வரன்

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள இந்த இக்கட்டான நேரத்தில் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க முயற்சிக்க கூடாது. கட்சி பேதங்கள் இன்றி நாட்டு மக்களுக்காக ஒன்றாக பயணிக்க வேண்டிய பொறுப்பு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (03) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அனர்த்தத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதுடன், பல இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தத்தில் இறந்தவர்களுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கின்றோம். தற்போதைய நெருக்கடியான சூழலில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து
இந்த நேரத்தில் நாங்கள் அரசியல் பாகுபாடுகளை நிறுத்தி வைத்துவிட்டு, அரசியல் செய்வதை நிறுத்தி,ஆட்சியை பிடிப்பதற்கோ, வேறு சதித்திட்டங்களுக்கோ உடந்தையாக இருக்காமல் நாட்டு மக்களுக்காக ஒன்றாக பயணிக்க வேண்டிய பொறுப்பு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளது.
ஒருவரையொருவர் குற்றம் கூறாமல் மக்களையும் பொருளாதாரத்தையும் எமது நாட்டையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில் அரச அதிகாரிகள் தங்களால் இயன்ற பணிகளை செய்கின்றனர். இவர்களுக்கு எமது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் பல்லாயிரக் கணக்கான நெற்காணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும். அதேபோன்று மலையகத்தில் அதிகளவில் மண்சரிவு அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மக்களுக்கும் தேவையான நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றார்.



