ரஞ்சனை அரசாங்க பகுப்பாய்வாளரிடம் அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு

குரல் சோதனைக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை அரசாங்க பகுப்பாய்வாளரிடம் அனுப்புமாறு நுகேகோட நீதவான் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை ஜனவரி 29 வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வெளியான குரல் பதிவினூடாக நீதிமன்ற செயற்பாடுகளுக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதால், ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அரசியலமைப்பின் பிரிவு 111 சி (2) இன் பிரகாரம் அவர் குற்றவாளி என்பதனால் அவரை கைதுசெய்ய பிடியாணையை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இதனை அடுத்து நுகேகொட நீதவான் நீதிமன்றம் நேற்று ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தது.
இதனை அடுத்து கொழும்பு குற்றவியல் அதிகாரிகளினால் நேற்று மாலை கைது செய்யப்பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்க, இன்று பிற்பகல் நுகேகொட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.