அம்பாரை மாவட்டத்தில் 1800 மில்லியன் ரூபா அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளேன் – கவீந்திரன் கோடீஸ்வரன்

வி.சுகிர்தகுமார்
அம்பாறை மாவட்டத்தில் 1800 மில்லியன் ரூபா அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை தான் முன்னெடுத்துள்ளதாக அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் க.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கடந்த காலத்தில் ஆலையடிவேம்பில் மாத்திரம் 62 கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனை விட எதிர்வரும் காலத்தில் அதிகளவான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இந்த மண்ணின் மகத்துவத்தினை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்படும். அதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை என்றார்.
அத்தோடு உரிமை சார்ந்த விடயங்களுக்கும் இருப்பு சார்ந்த விடயங்களுக்குமாக பாராளுமன்றத்தில் ஏனைய இடங்களிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டு மக்களுக்காக குரல் கொடுப்பவனாக இருப்பேன் எனவும் கூறினார்.
இதேநேரம் அம்பாறை மாவட்டத்தில் தமிழனின் இருப்பு என்பது கேள்விக்குறியாக மாறும் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் உருவாகி வருகின்றது. இதற்காகவே பல கட்சிகள் பல வேடங்களாக மாவட்டத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்களது நோக்கமெல்லாம் மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதியை இல்லாமல் செய்வதே. அவ்வாறு இல்லாமல் செய்யும்போது தமிழர்களின் அடையாளம் பூர்வீகம் பொருளாதாரம் அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் பாதிப்பு ஏற்படும்.
இந்நிலையில் எமது மக்கள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் சக்தி எமது கைகளில் இருந்து நழுவி மாற்றான் இனத்திற்கு செல்லும் அபாய நிலை உருவாகும்.
ஆகவே தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு தமிழ் பிரதிநிதி இல்லாமல் போகும் நிலையில் அதற்கு பதிலாக முஸ்லிம் அல்லது சிங்கள பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் குறிப்பாக அதாவுல்லா போன்றவர்களே தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.