பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஆலையடிவேம்பு அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வு….

ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவின் 2025ம் ஆண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் ஒழுங்கு படுத்தலில் இன்று (10) நடைபெற்றது.
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள ரத்னாயக்க, தமிழரசுக்கட்சியின் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கடந்த கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் முன்மொழியப்பட்டதுடன் இந்த ஆண்டில் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட திட்டங்களுக்கான அனுமதியினைப்பெற்று பிரதேச அபிவிருத்தியினை மேற்கொள்வது தொடர்பிலும் பிரதேசத்திலுள்ள சகல திணைக்களங்களினதும் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பாகவும் திணைக்களங்கள் வாரியாக தனித்தனியாக ஆராயப்பட்டு முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் அங்கு காணப்படுகின்ற குறைபாடுகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
செல்வி வினாயகமூர்த்தி