கொழும்பு, நீர்க்கொழும்பு கரையோர மக்களுக்கான முக்கிய அறிவித்தல்

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பற்றி எரிந்துக் கொண்டுள்ள ´எக்ஸ்பிரஸ் பர்ல்´ கப்பலில் இருந்து சிதைவடைந்த பொருட்கள் கொழும்பு மற்றும் நீர்க்கொழும்பு கடற்கரைகளில் கரை ஒதுங்கக்கூடும் என கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அவ்வாறான பொருட்களை தொடவோ அல்லது திறந்து பார்க்கவோ முயற்சிக்க வேண்டாம் என அந்த அதிகார சபை பொது மக்களிடம் கோரியுள்ளது.
அதேபோல், ஏதாவது பொருள் கண்காணிக்கப்பட்டால் உடனடியாக கடற்படைக்கு அல்லது பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.
இந்த கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 8 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கொள்கலன்களில் வெடித்துச் சிதறக்கூடிய பொருட்கள் உள்ளதால் மிகவும் ஆபத்தானது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
களனி கங்கை கரையோரம் முதல் மா ஓயா கரையோரம் வரை குறித்த பொருட்கள் மிதப்பதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.