2 ஆவது ரி-20 : இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

இலங்கை அணிக்கு எதிராக இரண்டாவது ரி-20 போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி-20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் நேற்று இடம்பெற்றது.
இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 142 ஓட்டங்களை எடுத்தது.
அதிகபட்சமாக குசல் பெரேரா 28 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுக்களையும் நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
பின்னர் 143 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 144 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல் 45 ஓட்டங்களையும், ஸ்ரேயாஸ் அய்யர் 34 ஓட்டங்களையும், தவான் 32 ஓட்டங்களையும், கோலி ஆட்டமிழக்காது 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கைப் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
போட்டியின் நாயகனாக அபாரமாகப் பந்துவீசிய நவ்தீப் சைனி தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி புனேவில் இடம்பெறவுள்ளது.