கொரோனாவின் தாக்கம் உயிரிழப்பு நூறினை கடந்துள்ள நிலையில் பொதுமக்கள் பொறுப்போடும் விழிப்போடும் செயற்படுங்கள்: ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் த.கிரோஜாதரன்

வி.சுகிர்தகுமார்
கொரோனாவின் தாக்கம் காரணமாக நமது நாட்டில் உயிரிழப்பு நூறினை கடந்துள்ள நிலையில் பொதுமக்கள் பொறுப்போடும் விழிப்போடும் செயற்படுங்கள் என ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் த.கிரோஜாதரன் கோரிக்கை விடுத்தார்.
இதுவரை கொரோனா தொற்று ஏற்படாத ஆலையடிவேம்பு பிரதேசத்தில் முதலாவது நபர் இனங்காணப்பட்டுள்ளார். இதனால் நமது பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளது. அன்றாட தொழிலாளர்கள் தொழிலை இழந்துள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் நமது நிலைமை மோசமடையலாம்.
ஆகவே மக்கள் பொறுப்போடும் விழிப்போடும் செயற்பட்டு நமது பிரதேசத்திலிருந்து கொரோனவை இல்லாதொழிக்க ஒற்றுமைப்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் கொரோனாவை ஒழிக்கும் செயற்பாடுகளுக்கும் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கும் அனைத்து அரச திணைக்களங்களோடும் இணைந்து செயற்பட பிரதேச சபை தயாராகவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.