
உலகப் புகழ்பெற்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI, சிறுவர்களின் நலன் கருதி பல புதிய கட்டப்பாடுகளையும், அம்சங்களையும், தனது செயலியான ChatGPTயில் அறிமுகப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 16 வயது சிறுவன் ஒருவன் ChatGPT-யுடன் நீண்ட உரையாடல்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பெற்றோர் OpenAI மீது வழக்குத் தொடர்ந்தனர்.
இச்சம்பவத்தை அடுத்து, இளம் வயதினரின் மனநலத்தில் சாட்பாட்களின் தாக்கம் குறித்த உலகளாவிய கவலை அதிகரித்துள்ள நிலையில், ChatGPT-க்கு புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
புதிய அம்சங்களின் மூலம்:
பெற்றோர் தங்கள் கணக்குகளை குழந்தைகளின் ChatGPT கணக்குகளுடன் இணைத்து உரையாடல்களை கண்காணிக்க முடியும்.
குழந்தை மன அழுத்தத்தில் இருக்கலாம் எனக் கருதப்படும் அறிகுறிகள் தென்பட்டால் பெற்றோருக்கு எச்சரிக்கை அனுப்பப்படும்.
நினைவகம் (memory), உரையாடல் வரலாறு (chat history) போன்ற அம்சங்களை பெற்றோர் முடக்கிக் கொள்ளும் வசதியும் வழங்கப்படும்.
இந்த மாற்றங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என OpenAI தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.