ஆலையடிவேம்பு பிரதேசத்த்தில் பொலிஸ் உபநிலையம் இன்று திறந்து வைப்பு: நிலையத்தின் பெயரினால் மக்கள் மனக்குழப்பத்தில்.

-கிரிசாந் மகாதேவன்-
அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் பொலிஸ் உபநிலையம் ஒன்று இன்று (29.11.2021) திறந்துவைக்கப்பட்டது.
குறித்த உப பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் அவர்களினால் நாவற்காடு பிரதேசத்தில் காணப்படும் நாவற்காடு பல்தேவைக்கட்டிடம் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த பொலிஸ் நிலைய திறப்பு விழாவில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் எல்.கே.டபிள்யூ.கமல் சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிலையத்தை திறந்து வைத்தார்.
குறித்த நாவற்காடு பல்தேவைக்கட்டிடம் அப்பிரதேச கர்ப்பிணி பெண்களுக்கான சுகாதார வைத்திய பரிசோதனை மேற்கொள்ளும் இடமாகவும், அப் பிரதேச மக்களின் பிள்ளைகளின் முன்பள்ளி பாடசாலையாக செயற்பட்டு வந்த இடமாகவும், கிராம சேவையாளரை இலகுவாக அப்பிரதேச மக்கள் சந்திக்கும் இடமாகவும் மற்றும் அப்பிரதேச மாதர் சங்கம் ஒன்று கூடல் இடமாகவும் செயற்பட்டு வந்ததுடன் மேலும் வெள்ள அனர்த்தங்களின் போது பாதிப்புற்ற மக்கள் தங்கும் இடமாகவும் பல வருடங்களாக செயற்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் நிலையம் நிறுவப்படுவது பிரதேசத்தின் அனைத்து பகுதியினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் சிறந்த விடயம் என்பதுடன் பிரதேச அனைத்து மக்களாலும் கோரப்பட்டு வந்த விடயமாகவும் காணப்படுகின்றது.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் கீழ் இருந்த ஆலையடிவேம்பு பிரதேசத்துக்கு தற்போது தனி பொலிஸ் நிலயம் மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த உப பொலிஸ் நிலையம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவு நாவற்காடு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் குறித்த பொலிஸ் நிலையத்துக்கான “பொலிஸ் காவல் அரண் கோளவில்” எனும் பெயர் பிரதேச மக்கள் மத்தியில் மனக்குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.