ஆலையடிவேம்பு

மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கம்: ஆலையடிவேம்பின் சமூக – பொருளாதார – கலாசார அடித்தளம் (சிறப்பு பார்வை)

2009 இல், போரின் முடிவில், போர் தந்த சிதைவுளுக்கு நாம் முகம் கொடுத்தோம். இதில் மிக முக்கியமானது போர் சிதைத்த எமது நிறுவன நினைவு வளம் (Institutional Memory) ஆகும். மனித இழப்புகளுக்கு அடுத்ததாக, எம்மால் கட்டமைக்கப்பட்ட நிறுவனங்களின் பெயர்வும், சிதைவும் பிடுங்கி எறியப்பட்ட பூசணிக் கொடிகள் போல எங்கும் பரவிக் கிடக்கிறது.

நிறுவனங்களின் சிதைவுகளில் மிக முக்கியமானதும், மிகவும் பாதிக்கப்பட்டதுமாக அமைவது கூட்டுறவு இயக்கமாகும்; கூட்டுறவுத் துறையின் வெற்றிக்கு அச்சாணியாக இருந்த கடனுதவுக் கூட்டுறவுச் சங்கங்களும் அதனோடு இணைந்தே அழிவுக்குள்ளாகின. இச் சிதைவுகளைக் கண்டறிந்து மீள் உருவாக்கம் செய்ய வேண்டிய காலமிது.

அதன் பொருட்டு, கூட்டுறவு இயக்கம் – கூட்டுறவின் கட்டமைப்புக்கள் மிக முக்கிய அசைவியக்கமாக மாற முடியுமா? போரின் பின்னரான மீள் கட்டுமானத் திட்டங்களுக்கும் நிலையான அபிவிருத்திக்கும் கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் யாது? எங்கிருந்து தொடங்குவது? போரின் பின்னரான சிதைவுகள், அதன் விளைவாக விளைந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு அதனால் உதவ முடியுமா? ஆகிய வினாக்களை இத் தொடர் முன்வைத்து ஆராய்கின்றது.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகம் உட்பட, இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள கூட்டுறவுத் துறையினால் ஒரு வலுவான மாற்றுப் பொருளாதாரக் கட்டமைப்புக்கு சிறப்பாக உதவ முடியும். கூட்டுறவுத் துறையின் வளர்ச்சி சார் விடயங்களை மையமிட்டு காத்திரமான விடயங்களை தர்க்கத்துடன் கலந்துரையாடி, சிந்தனைக்கான முன்மொழிவுகளை தரும் இத் தொடர் ‘கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் : போரின் பின்னரான மீள் கட்டுமானமும் அபிவிருத்தியும்’ எனும் பெயரில் அமைகிறது.

அம்பாறை மாவட்டத்தில், குறிப்பாக போரின் இன்னல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், வறுமைநிலை தொடர்ந்தும் கவலைக்குரியதாக உள்ளது. விகிதாசார ரீதியாகப் பார்க்கும்போது, பல பகுதிகள் இன்னும் போர்க்கால நிலையிலிருந்து முன்னேற்றம் அடையவில்லை எனலாம். தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில், வாழ்வாதாரத்தின் மீதான தாக்கம் அதிகமாகியுள்ளது. தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தப் பகுதிகள் புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவை மாவட்டத்தின் ஏழ்மையான பகுதிகளாகவும் காணப்படுகின்றன.

பல குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யப் போராடுகின்றன. தற்போதைய பொருளாதார நெருக்கடி, உள்நாட்டுப் போரின் விளைவுகளை மேலும் தீவிரமாக்கி வருகின்றது. இப்பகுதி மக்கள் ஒருவகையில் கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் தமிழ்ப் பகுதிகளில், தமிழ் இளைஞர்களிடையேயான வறுமை விகிதம் மாவட்டச் சராசரியைவிட 13% அதிகமாக உள்ளது, மேலும் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். கல்விக்கான சவால்கள் அதிகரித்துள்ளதால், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையும் மேலோங்கியுள்ளது.

வாழ்வாதாரத்திற்காக தமிழ் மீனவர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். இந்தப் பகுதிகளில், குறைந்த வாழ்க்கைத்தரம் வெளிப்படையாகக் காணப்படுகிறது. பல குடும்பங்கள் தினசரி வருமானத்திற்காகப் போராடுகின்றன. வளங்களுக்கான வாய்ப்பின்மை, மோசமான உட்கட்டமைப்பு, பொருளாதார வாய்ப்புகளின் பற்றாக்குறை ஆகியவை வறுமையைத் தீவிரப்படுத்துகின்றன. குறைந்த கல்வி அடைவு, வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் மேலும் கட்டுப்படுத்துகிறது. பெண்கள் மத்திய கிழக்கிற்குக் குடிபெயர்வது, இளைஞர்கள் அருகிலுள்ள நகரங்களில் தினக்கூலியாக வேலை செய்வது போன்றன கவலைக்குரிய போக்குகளாக மாறியுள்ளன.

விவசாயத்துறையும் கடும் தடைகளை எதிர்கொள்வதால், விவசாயிகளோடு உள்ளூர்ப் பொருளாதாரமும் பாதிக்கப்படுகின்றது. இந்தச் சவால்களைச் சமாளிக்க, கிழக்கு மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் உடனடி முயற்சிகள் தேவையாகின்றன. குறிப்பாக, ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகங்களின் பிரச்சினைகளில் மூலோபாய ரீதியாக கவனம் செலுத்தப்பட வேண்டும். கல்வி, உட்கட்டமைப்பு, மற்றும் பொருளாதார மேம்பாட்டை உள்ளடக்கிய ஒரு விரிவான உத்தி இன்றியமையாததாகின்றது. தமிழ்ப் பகுதிகளில் கூட்டுறவுகள் முக்கிய பங்கு வகிக்க முடியும்.

உள்ளகக் காலனித்துவத்தின் முதல் நிலம்: அம்பாறை மாவட்டம்
அம்பாறை மாவட்டம், ஏப்ரல் 10, 1961 அன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்குப் பகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு அதிகாரபூர்வ மாவட்டமாக நிறுவப்பட்டது. இதற்கு முன்பு, இந்தப் பகுதி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஐரோப்பியக் காலனித்துவச் சக்திகளைப் போன்ற சுதந்திர இலங்கையின் உள்நாட்டுக் காலனித்துவச் சக்திகளின் அணுகுமுறையால் வளமான, தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய நிலமான கிழக்கு இலங்கை, பகுக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் இதற்கான திறந்த சாட்சியமாக உள்ளது.

1956 தேர்தலுக்குப் பிறகு, இங்கு அரசு ஆதரவுடன் சிங்களக் குடியேற்ற முயற்சிகள் தீவிரமடைந்து, சிங்கள மக்கள் தொகை கணிசமாக அதிகரித்தது. இதன் விளைவாக, உள்ளூர்த் தமிழ்ச் சமூகங்கள் இடம்பெயர்ந்து தங்கள் சொந்த மண்ணில் அகதிகளாக மாறினர். அம்பாறை மாவட்டத்தின் இன அமைப்பு மாறியது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான அரசு, ‘சிங்களம் மட்டும்’ மொழிச்சட்டம் உள்ளிட்ட கொள்கைகளின் மூலம் சிங்கள – பௌத்த மேலாதிக்கத்தை வலுப்படுத்தியது. 1940களில் தொடங்கப்பட்ட கல்ஓயா திட்டம், சிங்களக் குடியேற்றத்துக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக, 1953இல் 31,107 ஆக இருந்த அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சிங்கள மக்கள்தொகை 1981இல் 157,017 ஆக உயர்ந்தது. இந்தக் குடியேற்றங்கள் இன மோதல்களை மேலும் தீவிரப்படுத்தின. இதன் விளைவாக, படுகொலைகளும் நீடித்த இடப்பெயர்வுகளும் இடம்பெற்று, அம்பாறை இன மோதல்களின் களமாக மாறியது. உள்நாட்டுப் போர் முடிவடைந்த நிலையிலும், உள்ளகக் காலனித்துவம் மற்றும் இன உறவுகளின் மரபான சவால்கள் அம்பாறையில் இன்னும் தொடர்கின்றன.

தங்கள் இழப்புகளுக்கு முன், பணிந்து ஒடுங்காமல், மக்கள் தங்கள் இருப்பைத் தக்கவைக்க தொடர்ந்து போராடினர். அமைப்புகளைக் கட்டியமைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தினர். இதன் அடையாளமாக அம்பாறை மாவட்டத்தில், குறிப்பாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில், ‘மகாசக்தி கூட்டுறவு’ உருவானது. அதன் கதையும் தொடர்ந்த வளர்ச்சியும் முக்கியத்துவமுடையவை. மகாசக்தி கூட்டுறவு, பலருக்குப் பாடமாக அமைகின்றது.

மகாசக்தி கூட்டுறவு
மகாசக்தி சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கம் 1992 அக்டோபர் 10, விஜயதசமி நாளில் தொடங்கப்பட்டு, 1993 பெப்ரவரி 20 அன்று அதிகாரபூர்வமாக கூட்டுறவு அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டது. கடந்த 32 ஆண்டுகளாக பெண்களின் தலைமையில் இயங்கும் ஒரு நிலையான கூட்டுறவாக இது செயற்படுகிறது.

1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் ஆயுத வன்முறை உச்சத்தில் இருந்தது. ஆலையடிவேம்பு பிரதேசம் காவுகொள்ளப்பட்ட பிரதேசமாக மாற்றப்பட்டது. நீடித்த மோதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள், கணவனை இழந்த இளம் பெண்களை உருவாக்கியது. நெருக்கடிகளின் மத்தியில், பலருக்கு நம்பிக்கையையும், வாழ்க்கையின் சுமைகளைக் குறைக்கும் வலிமையையும் தர உருவாக்கப்பட்ட அமைப்புதான் மகாசக்தி கூட்டுறவு.

கூட்டுறவு அமைப்பின் உருவாக்கத்திற்கு பலர் அர்ப்பணிப்புடன் உழைத்தனர். சமூகஜோதி திரு. எஸ். செந்துரராசா, அமரர் என். மணிவாசகம், அமரர் பி. வாரித்தம்பி, க. சோமசுந்தரம் , அமரர் எம். இலட்சுமணன் மற்றும் அமரர் இ. கனகசபை ஆகியோர் முன்னோடிகளாக இருந்தனர். அப்போது திரு. எஸ். செந்துரராசா யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து அக்கரைப்பற்றில் வசித்து வந்தார்.

பாதிக்கப்பட்ட பெண்களின் தேவைகள் பல தீர்க்கப்படாமல் இருந்தன. உடனடித் தேவைகளைத் தீர்ப்பதில் பல இடர்கள் இருந்தன. மனிதாபிமான தேவைகளுக்கு அடுத்ததாக, நீண்டகால அமைப்பின் வழியிலான தீர்வு தேவை என்று உணரப்பட்டது. 22 சங்கங்கள் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உருவாக்கப்பட்டன. அவற்றின் பெயர்கள் அனைத்தும் சக்திகளையே குறிக்கின்றன: பராசக்தி, சிவசக்தி, ஓம்சக்தி, ஜெயசக்தி, யுகசக்தி, ஆதிசக்தி, தர்மசக்தி, அருள்சக்தி, ஜனாசக்தி, சிறிசக்தி, நவசக்தி, சர்வசக்தி, வீரசக்தி, சுடர்சக்தி, தேவசக்தி, துருவசக்தி, ஜீவசக்தி, யோகசக்தி, ஆத்மசக்தி, சாந்தசக்தி, கீதாசக்தி மற்றும் உதயசக்தி. இந்த அனைத்துச் சங்கங்களும் ஒன்றிணைந்து மகாசக்தி கூட்டுறவு சிக்கன கடனுதவுச் சங்கமாக உருவாக்கமடைந்தது.

மகாசக்தி என்பது பாதிக்கப்பட்டவர்களின் கூட்டுறவு அமைப்பாக அமைகிறது. எல்லாப் பெண்களும் ஒரு வலையமைப்பில் இணைந்து, நெருக்கடியான காலத்தின் தேவைகளை ஒன்றிணைத்து, அவற்றைத் தீர்க்க ஒன்றாக முன்னேறினார்கள். பலரின் வாழ்வுக்கு அடித்தளமாக இருந்துள்ள மகாசக்தி, சமூக – பொருளாதார மற்றும் கலாசார இணைவிற்கான தன்னிறைவுக் கட்டமைப்பை நோக்கிய ஒரு கூட்டு நிகழ்வாக வளர்ந்தது.

மகாசக்தியின் நிதிப்பலம் அதன் சிறந்த வளர்ச்சியைச் சுட்டுகிறது. நிரந்தர அலுவலகம், கடைத்தொகுதிகள் மற்றும் பயிற்சிநிலையம் ஆகியவற்றைக்கொண்ட வளமான சங்கமாக மகாசக்தி திகழ்கிறது. 17 நிரந்தரக் கூட்டுறவுப் பணியாளர்களின் குடும்பம் மகாசக்தி. பெண்கள் தலைமையிலான கூட்டுறவு முகாமைத்துவச்சபை மூலம் நிர்வகிக்கப்படும் நிர்வாக அமைப்பு, கூட்டுப் பங்காண்மையின் அடிப்படையில் தலைமைதாங்கும் பெண்களின் பொறுப்பில் உள்ளது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker