ஆலையடிவேம்பு, வாச்சிக்குடா பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய வருசாபிஷேக தின அஸ்டோத்திர சங்காபிஷேகம் எதிர்வரும் 06ஆம் திகதி…

வி.சுகிர்தகுமார்
சங்காபிஷேக பூஜை காயத்திரி சித்தர் டாக்டர் ஆர்.கே முருகேசு சுவாமிகளின் மானசீக ஆசிர்வாதத்தோடு ராம்ஜி சுவாமி அவர்களின் வழிகாட்டல் மூலம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இம்முறை நடைபெறவுள்ளது.
இலங்கையில் பல ஆஞ்சநேயர் ஆலயங்கள் இருந்தாலும் ஜந்து முகங்களுடன் ஐந்தடி உயரத்தில் திருக்காட்சி தரும் ஸ்ரீராமபக்த பஞ்சமுக ஆஞ்சநேயரின் கற்சிலை அமைந்துள்ள ஆலயம் இது ஒன்றே என்பதே இங்கு சிறப்பு. உலகிலே காணப்படும் பல்வேறு மூலிகை மரங்களும் குறிப்பாக 27 நட்சத்திரங்களுக்கும் உரித்தான அற்புதமரங்களும் இயற்கையாக உருவாகி வானுயர்ந்து சோலைபோல் வளர்ந்து நிற்கும் மருத மரமும் ஆலயத்திற்கான இன்னுமொரு தனிச்சிறப்பு.
இவ்வாறு சிறப்புடன் குருதேவர் காயத்திரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் பரிபூரண ஆசீர்வாதத்துடன் அமைக்கப்பட்ட இவ் ஆலயத்தில் வருடந்தோறும் மலேசியாவில் இருந்து வருகைதரும் ராம்ஜி சுவாமிகளின் பங்கேற்புடன் அவரின் வழிகாட்டல் மூலம் பல வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றமை சிறப்பம்சமாகும்.
இதன் அடிப்படையில் 06ஆம் திகதி காலை குருதேவர் பூஜை, யாகபூஜையுடன் பிரதான கும்ப வெளிவீதி உலா மற்றும் பிரதான கும்பம் உள்வீதி ஊர்வலத்துடன் இடம்பெறும் வருசாபிஷேக தின அஸ்டோத்திர சங்காபிஷேகம் விசேட பூஜையும் நிறைவுறும்.