கொரோனா வைரஸ்: 5 இலட்சத்தைக் கடந்த உயிரிழப்புக்கள்- 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தைக் கடந்து 5 இலட்சத்து 1,298 ஆக பதிவாகியுள்ளது.
அதேநேரம் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,081,545 ஆக உயர்வடைந்துள்ளது.
உலக மக்களை அச்சத்தில் வைத்துள்ள இந்த கொடிய வைரஸுக்கான மருந்து இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், மருத்துவ சேவையாளர்களின் உன்னத பணியினால் மட்டுமே குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த கொடிய வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,458,369 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான 4,121,878 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 57,748 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் தொடர்ந்தும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 2,596,537 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், 128,152 பேர் உயிரிழந்துள்ளனர்.
அடுத்ததாக பிரேஸிலில் 1,315,941 பேரும் ரஸ்யாவில் 627,646 பேரும் இந்தியாவில் 529,577 பேரும் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் பிரேஸிலில் 57,103 பேரும் ரஸ்யாவில் 8,969 பேரும் இந்தியாவில் 16,103 பேரும் இந்த வைரஸினால் உயிரிழந்துள்ளனர்.
இதேநேரம் நாளாந்தம் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் மெக்ஸிகோவும் பதிவாகியுள்ளது. அதன்படி அங்கு ஒரே நாளில் 4,410 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 212,802 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு ஒரே நாளில் 602 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 26,381 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தோற்றம் பெற்ற சீனாவிலும் மீண்டும் வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதன்படி, புதிதாக 21 பேர் அங்கு வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 83,500 ஆக அதிகரித்துள்ள அதேநேரம் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4,634 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.