வாழ்வியல்

புது செருப்பு காலை கடித்தால் இதை செய்யுங்க, வலி பறந்து போகும்!

எல்லா வயதினருக்கும் ஏற்படக்கூடிய இயல்பான ஒரு பிரச்சனைதான். சிறுவயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருமே புது செருப்பு அணியும் போது காலில் புண் ஏற்படக்கூடும். தற்போது மாடர்னாக இருக்க என்று அணியும் கட் ஷூக்கள் தான் அதிகப்படியான பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது.

ஆரம்பத்தில் சருமத்தில் தடிப்பையும் வலியையும் உண்டாக்கும் இவை மூன்றே நாள்களில் அந்த இடத்தில் கருமையையும் சிறு கொப்புளத்தையும் உண்டாக்கிவிடும். சருமம் நிறமாக இருப்பவர்களுக்கு குதிகாலிலும் விரல்கள் இருக்கும் பகுதியிலும் சிவந்து விடும். இந்த புண் மற்ற காயங்களை காட்டிலும் அதிக வலியை உண்டாக்கிவிடும்.

செருப்புக்கடி அவதிக்கு முன்பு முதலில் செருப்பு வாங்கும் போது இதை மனதில் கொள்ளுங்கள். மிக கச்சிதமாக விரல்களை இறுக்கி பிடிக்கும் அளவுக்கான செருப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டாம். பழக பழக இவை எளிதாகிவிடும் என்று நினைக்கவேண்டாம். சரியான அளவை தேர்வு செய்து வாங்குவது அவசியம்.

எப்போதும் புதிய செருப்பு பயன்படுத்து போது குறிப்பிட்ட நாள் வரை உங்களுக்கு காலில் புண் ஏற்படுகிறதா என்பதை கவனியுங்கள். அப்படி இருந்தால் பயன்படுத்துவதற்கு முன்பு இந்த பாதுகாப்பை மேற்கொள்ளுங்கள்.

கட் ஷூ அணியும் போது சிலர் சாக்ஸ் அணிவது உண்டு. சாக்ஸ் அணிந்து கொள்வதன் மூலம் செருப்புக்கடி மற்றும் ஷூக்கடியிலிருந்து தப்பிக்கலாம் என்றாலும் எல்லோரும் சாக்ஸ் பயன்படுத்துவதில்லை. சில மாடல்களுக்கு சாக்ஸ் பயன்படுத்துவது நன்றாக இருக்காது என்பதால் பயன்படுத்தவும் முடியாது. அவர்கள் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தலாம்.

செருப்பு அல்லது கட் ஷூ எதுவாக இருந்தாலும் முதலில் மெழுகுவத்தியை அதன் மீது தடவிகொள்ளுங்கள். மெழுகுவத்தியை ஐந்துநிமிடங்கள் ஏற்றிவைத்து பிறகு அதை அணைத்து மெழுகுவத்தியை செருப்பின் ஓரங்களில் குறிப்பாக கால்கள் நுழையும் பகுதி விரல்கள் இருக்கும் பகுதிக்குள் நன்றாக தேயுங்கள். செருப்பை அணிவதற்கு அரைமணி நேரம் முன்பு இப்படி செய்து பிறகு அணிந்தால் அவை கால்களிலும் விரல்களிலும் அழுத்தமாக படியாது.

செருப்பின் அமைப்பே சற்று கடினமாக இருந்தால் அதை முதலில் மென்மையாக்க முயற்சி செய்யுங்கள். பயன்படுத்துவதற்கு முன்பு அல்லது இரவில் பேபி ஆயிலை காட்டனில் நனைத்து செருப்புகளை முன்புறமும் பின்பக்கமும் கால்கள் நுழையும் இடம் வரை நன்றாக தடவி வைக்கவேண்டும். விரல்கள் இருக்கும் பகுதியில் சற்று கூடுதலாக எண்ணெய் தேய்ப்பதன் மூலம் கடினத்தை குறைக்க முடியும்.

அப்படி செய்தாலும் அதை பயன்படுத்தும் போது காலை கடித்தால் செருப்பை உபயோகிப்பதற்கு முன்பு செருப்பின் ஓரங்களிலும் கால்களில் செருப்பு ஓரங்கள் படும் இடங்களிலும் பேபி பவுடரை நன்றாக தடவி கொள்ளுங்கள். இவை செருப்புகள் உராயும் போது உண்டாகும் புண் கொப்புளங்கள் வராமல் பாதுகாக்கும்.

தினமும் இந்த பயிற்சி செய்வதில் சிரமம் கண்டறிந்தால் செருப்பு சற்று பழையதாகும் வரை செருப்பின் உள்ளே சிலிக்கான் பேட்களை ஒட்டி வைக்கலாம். குறிப்பாக கட் ஷூக்கள் போடுபவர்களுக்கு இவை நிச்சயம் கைகொடுக்கும். சிலர் பேண்டேஜ் ஒட்டி வைப்பார்கள். அவை காலணியின் அழகை குலைத்துவிடும். அதற்கு பதிலாக கணுக்கால் பகுதியில் பேண்டேஜ் ஒட்டிகொண்டு அதன் மீது கட் ஷூக்கள் அணிந்தாலும் பாதிப்பை உண்டாக்காது.

 

இவ்வளவு பாதுகாப்பையும் மீறி உங்கள் செருப்புகள் காலை பதம் பார்த்தால் இதை செய்யுங்கள். செருப்புகளை அணிவதற்கு முன் காலில் விரல்களில் தேங்காயெண்ணெய் தடவி கொள்ளுங்கள்.
செருப்பு கடியால் காலில் கொப்புளம் உண்டானால் தென்னை மர ஓலையை மட்டும் எரித்து அதை தேங்காய் எண்ணெயுடன் குழைத்து கொப்புளத்தின் மீது தடவிவந்தால் கொப்புளம் பெருகாமல் அடங்கிவிடும்.

தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை சேர்த்து காய்ச்சி கொப்புளங்கள் மீது தடவிவரலாம். கொப்புளம் பெரியதாக இருந்தால் வேப்பிலையை மஞ்சளுடன் அரைத்து கொப்புளங்கள் மீது பற்றுபோடலாம்.

தினமும் இரவு தூங்கும் போது கால்களை மிதமான வெந்நீரில் வைத்திருந்து உலர துடைக்கவும். பிறகு கற்றாழை ஜெல்லுடன் வெற்றிலை சாறு, சிட்டிகை மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து கொப்புளம் இருக்கும் இடத்தில் பற்று போல் கனமாக போடவும். அதன் மீது ஒரு வெற்றிலையை வைத்து இறுக்கி கட்டவும். மறுநாள் காலை அந்த கட்டை பிரித்து பார்த்தால் கொப்புளம் அடங்கியிருக்கும். பிறகு ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.

புதுசெருப்பு பழகினால் சரியாகிவிடும். அதற்கு எதற்கு இத்துணை பாதுகாப்பு என்று கேட்கலாம். மற்ற புண்களை காட்டிலும் செருப்புக்கடியால் உண்டாகும் புண்கள் வலி மிகுந்தவை. குறைந்த நாட்களே என்றாலும் கூட அவை பழகுவதற்குள் அதிக பாதிப்பை உண்டாக்கிவிடும் என்பதால் இதற்கான கைவைத்தியத்தை தெரிந்துகொள்வது நல்லது. பெரும்பாலும் செருப்புக்கடியை காட்டிலும் ஷூக்கள் அணியும் போதுதான் அதிக பாதிப்பு உண்டாகிறது.

இவ்வளவு பாதிப்பை உண்டாக்கும் கடினமான காலணிக்கு கைவைத்தியம் செய்துகொள்வதை விட சரியான அளவில் பாதிப்பை உண்டாக்காத காலணியை வாங்குவது சிறந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker