ஆன்மீகம்

குங்குமமிடும்போது சொல்ல வேண்டிய மந்திரம்!

நெற்றி நிறைந்த குங்குமம் வைத்து வரும் பெண்களை மகாலக்‌ஷ்மியாக பார்ப்பது நம்முடைய சமூகத்தின் வழக்கம். ஸ்டிக்கர் பொட்டு வைப்பதற்கு சென்று, பொட்டு இல்லாமலே செல்லும் வழக்கம் பல பெண்களுக்கு வந்துகொண்டிருக்கிறது. நெற்றியில் குங்கும் வைப்பது மங்களத்தைத் தரும், லக்‌ஷ்மியின் அருளைப் பெருவார்கள் என்பது நம்பிக்கை.

நெற்றில் குங்குமமிடுவதிலும் சில விதிமுறைகளை சொல்லியிருக்கிறார்கள் நம் முன்னோர். குங்குமத்தை மோதிர விரல் கொண்டுதான் இட வேண்டும். திருமணம் ஆன பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதுடன் தலைவகிடின் ஆரம்பம், திருமாங்கல்யம் என கூடுதலாக இரண்டு இடங்களிலும் குங்குமம் வைக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

குங்குமம் இடும்போதும் சொல்ல வேண்டிய மந்திரம் என்று ஒன்று உள்ளது. கொஞ்சம் நீண்ட மந்திரம்தான். இதை தினமும் சொல்ல முடியாவிட்டாலும் குறைந்தது செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் குங்குமம் வைக்கும்போது சொல்ல முயற்சிக்கலாம்.

குங்குமம் வைக்கும்போது சொல்ல வேண்டிய பாடல்…

“குங்குமமாவது குறைகளைத் தீர்ப்பது
குங்குமமாவது குடியினைக் காப்பது
குங்குமமாவது குணமதளிப்பது
குங்குமமாவது கொல்வினை தீர்ப்பது.

விதி வினை வெல்வது விமலையின் குங்குமம்
நிதிதனை ஈவது நிமலையின் குங்குமம்
பதிதனைக் காப்பது பதிவிரதை குங்குமம்
கதிதனையாள்வதும் குங்குமமாமே

தஞ்சமென்றோரை தடுத்தாண்டு கொள்வதும்
பஞ்ச மாபாதகம் பரிந்துமே தீர்ப்பதும்
அஞ்சின பேர்க்கு அபயமளீப்பதும்
கஞ்சி காமாக்ஷி குங்குமமாமே

நற்பத மீவது நாரணி குங்குமம்
பொற்பினை ஈவது பூரணி குங்குமம்
சிற்பரமாவது சிவகாமி குங்குமம்
கற்பினைக் காப்பதும் குங்குமமாமே

செஞ்சுடர் போல்வது சீரான குங்குமம்
கொஞ்சு மழகைக் கொடுப்பது குங்குமம்
அஞ்சு புலங்களடக்கி யருள்வதும்
கஞ்சி காமாக்ஷியின் குங்குமமாமே

நோயினைத் தீர்ப்பதும் நுண்ணறிவீவதும்
பேயினைத் தீர்ப்பதும் பெரும் புகழீவதும்
சேயினைக் காப்பதும் செல்வம் தருவதும்
தாயினை அர்ச்சித்த குங்குமமாமே

சக்தி கொடுப்பதும் சத்தியம் காப்பதும்
பக்தி யளிப்பதும் பரகதி யீவதும்
முக்தி கொடுப்பதும் மும்மலம் தீர்ப்பதும்
சித்தி தருவதும் குங்குமமாமே

நெஞ்சிற் கவலைகள் நீக்கியருள்வதும்
செஞ்சொற் கவிபாடும் சீரினை யீவதும்
வஞ்ச பகைவரை வாட்டி யருள்வதும்
கஞ்சி காமாக்ஷி குங்குமமாமே

சிவசிவ என்று திருநீறணிந்த பின்
சிவகாமியேயென் சிந்தித்தணிவதும்
தவமான மேலோருந்தரித்துக் களீப்பதும்
பவவினை தீர்ப்பதும் குங்குமமாமே

எவையெவை கருதிடில் அவையவையீவதும்
நவவகை சக்தியின் நலனைக் கொடுப்பதும்
குவிசெய் கரத்துடன் கும்பிட்ட பேர்க்கு
குவிநிதி யீவதும் குங்குமமாமே

அஷ்டலக்ஷ்மி அருளதளிப்பதும்
இஷ்டங்களீவதும் ஈடற்ற குங்குமம்
கஷ்டம் தவிர்ப்பதும் காத்தெனை யாள்வதும்
சிஷ்டராய் செய்வதும் குங்குமமாமே

குஷ்டம் முதலான மாரோகம் தீர்ப்பதும்
நஷ்டம் வாராதொரு நலனைக் கொடுப்பதும்
எட்டும் இரண்டும் அறிவித்தோர் வீடினை
கிட்டவே செய்வதும் குங்குமமாமே

பட்ட காலிலே படுமென கஷ்டங்கள்
விட்டிடாமலே வந்துமே வாட்டினும்
பட்டான பார்வதி பாதம் பணீந்தே
இட்டார் இடர் தவிர் குங்குமமாமே

சித்தம்தனை சுத்தி செய்வதற் கெளியதோர
எத்துந் தெரியாத ஏமாந்த மாந்தரே
நித்தம் தொழுதென்னை குங்குமந்தன்னை
நித்தம் தரித்துமே வீடடைவீரே

மிஞ்சும் அழகுடன் குங்குமம் தன்னை
செஞ்சுடராகுமோர் கஞ்சி காமாக்ஷியின்
கஞ்ச மலர் முகந்தன்னில் திகழ்வதும்
பஞ்ச நிதி தரும் குங்குமாமே.”

நாம் என்ன நினைக்கிறோமோ அது போலவே நடக்கும் என்று சொல்வார்கள். நல்லதை நினைத்து செய்யும் எந்த ஒரு காரியமும் நல்லதாகவே அமையும். எனவே, இதை மனப்பாடம் செய்து முடிந்தவரை சொல்லுங்கள்… குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker