மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ரி-20 தொடர்: பலம் வாய்ந்த இலங்கை அணி அறிவிப்பு!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ரி-20 தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு நிறைந்த இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
லசித் மாலிங்க தலைமையிலான 15பேர் கொண்ட அணியில், செஹான் ஜயசூரிய மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல, ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடியதன் அடிப்படையில், சகலதுறை வீரரான திசர பெரேராவும் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,
லசித் மாலிங்க தலைமையிலான அணியில், அவிஷ்க பெனார்டோ, குசல் ஜனித் பெரேரா, செஹான் ஜயசூரிய, நிரோஷன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, திசர பெரேரா, தசுன் சானக, வனிந்து ஹசரங்க, லக்ஷன் சந்தகன், இசுரு உதான, நுவான் பிரதீப், லஹிரு குமார ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதில் தற்போது நடைபெற்றுவரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அதில் இரண்டிலும் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி கண்டி – பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து ரி-20 தொடர் நடைபெறுகின்றது. இதன் முதல் போட்டி, மார்ச் மாதம் நான்காம் திகதி, கண்டி – பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.