நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தொகுதி அமைப்பாளர்களுக்கு ரணில் முக்கிய ஆலோசனை!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு அனைத்து தொகுதி அமைப்பாளர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன்படி, தொகுதி வாரியாக அனைத்து அமைப்புக்களையும் துரிதமாக வலுப்படுத்துமாறு சிறிகொத்தாவில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் தொகுதி அமைப்பாளர்களுடன் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, கொழும்பு உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்துவதை விட சமூக வலைத்தளங்களின் ஊடாக தொழிற்துறை சார்ந்தவர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
பொதுத் தேர்தலுக்காக கட்சியை தயார்படுத்துவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், உள்ளுராட்சி உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் முன்னணி உள்ளிட்டோருடனும் எதிர்வரும் நாட்களில் சிறிகொத்தாவில் சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.