அமெரிக்காவின் இராணுவ பலத்தையும் வர்த்தகத்தையும் குறிவைக்கிறது சீனா- பொம்பியோ எச்சரிக்கை!

அமெரிக்காவை வர்த்தக ரீதியாகச் சுரண்டுவதற்கான கொள்கைகளை சீனா பின்பற்றுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
வொஷிங்டனில் தேசிய ஆளுநர்கள் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அமெரிக்க இராணுவத்தை ஆபத்தில் ஆழ்த்தவும் முயற்சிகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களின் ஓய்வூதிய நிதிகள், சீன நிறுவன செயற்பாடுகளின் தீவிரத் தன்மை புரியாமல் அவற்றில் முதலீடு செய்யப்படுவதாகவும், இவ்வாறு முதலீடு செய்யப்படுவதால் அது சீனாவில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் உள்ள 10 இலட்சம் முஸ்லிம் சிறுபான்மையினரைக் கண்காணிப்பதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்திவரும் நிறுவனத்தில் ஃபுளோரிடா மாநில ஓய்வூதிய நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கலிஃபோர்னியா ஓய்வூதிய நிதி சீனாவின் இராணுவத்துக்கு பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இது அமெரிக்க முப்படைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
‘நம்புங்கள் ஆனால் சரிபாருங்கள்’ என்ற முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரீகனின் வார்த்தைகளை மேற்கோள்காட்டி பேசிய மைக் பொம்பியோ, சீனாவுடன் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.