மத்திய கிழக்கில் வேலை வாய்ப்புக்காக சென்றுள்ள 40 வீதமான பெண்கள்- அறிக்கை வெளியானது

மத்திய கிழக்கில் வேலை வாய்ப்புக்காக ஆண்களுடன் ஒப்பிடுகையில் 40 வீதமான பெண்கள் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாக 2019இல் மாத்திரம் 80 ஆயிரத்து 998 பேர் சென்றுள்ளமை தரவுகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக குறித்த பணியகத்தின் பொது முகாமையாளர் ஜெகத் படுகெதர தெரிவித்தார்.
அத்துடன், கடந்த வருடத்தில் ஒரு இலட்சத்து 22ஆயிரத்து 143 பேர் வரையில் வேலை வாய்ப்பிற்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ள நிலையில் மொத்தமாக 2 இலட்சத்து 3 ஆயிரத்து 141 பேர் வரை வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.
அவர்களில் அதிகமான பெண்கள் குவைத் நாட்டிற்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளதுடன், அவ்வாறாக 30 ஆயிரத்து 31 பேர் வரையில் குவைத்தில் உள்ளனர். அதேபோல், அதிகளவிலான ஆண்கள் கட்டார் நாட்டிற்குச் சென்றுள்ளதுடன் 36 ஆயிரத்து 161 பேர் இவ்வாறு கட்டாரில் வேலையில் உள்ளனர்.
கடந்த வருடத்தில் பொதுவாக 9ஆயிரத்து 41 பேர் வெளிநாடு சென்றுள்ளதுடன், பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் 62 ஆயிரத்து 687 பேர் வெளிநாட்டில் உள்ளனர் என்றும் முழுமையாகப் பயிற்சி பெறாத 9ஆயிரத்து 478 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளது.
அவர்களில், எழுதுவினைஞர் தொழிலுடன் தொடர்புடைய தொழில்களுக்காக 9ஆயிரத்து 155 பேரும் பணிப் பெண்களாக 61 ஆயிரத்து 603 பேரும் பயிற்சி பெறாத தொழிலாளர்களாக 51 ஆயிரத்து 177 பேரும் வெளிநாடு சென்றுள்ளனர்.
அதேவேளை, 2018ஆம் ஆண்டில் மொத்தமாக 2 இலட்சத்து 11ஆயிரத்து 229 தொழிலாளர்கள் வெளிநாடு சென்றுள்ளதுடன், அதில், 81ஆயிரத்து 511பேர் பெண்களும் 1 இலட்சத்து 29ஆயிரத்து 718 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில், கடந்த வருடம் வெளிநாடு சென்ற தொழிலாளர்கள் தொடர்பாக 3 ஆயிரத்து 494 முறைப்பாடுகள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளதுடன் அவற்றுள் 2 ஆயிரத்து 616 முறைப்பாடுகளுக்கு தீர்வும் பெற்றுக் கொடுக்கப்பட்டதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.



