ட்ரம்பிடமிருந்து போர் பிரகடனம் செய்யும் அதிகாரத்தை பறிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்!

ஈரானுடன் போர் புரிவதையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரும்புவதாக உலக நாடுகள் குற்றஞ்சுமத்தி வருகின்ற நிலையில், ட்ரம்பிடமிருந்து போர் பிரகடனம் செய்யும் அதிகாரத்தை பறிக்கும் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது.
ட்ரம்ப், போர் பிரகடனம் செய்துவிடக் கூடாது என்பதற்காக, அந்த அதிகாரத்தை பறிக்க அந்நாட்டு பிரதிநிதிகள் சபை தீர்மானம் கொண்டு வந்தது.
இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், ட்ரம்ப் சார்ந்த குடியரசுக் கட்சியினரின் 3 பேர் அவருக்கு எதிராகவே வாக்களித்தனர். முடிவில், 224 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 194 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனால், பிரதிநிதிகள் சபையில் இந்த தீர்மானம் நிறைவேறியது.
செனட் சபையிலும், இந்த தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது. அங்கு, இன்னும் வாக்கெடுப்பு நடக்கவில்லை எனினும், குடியரசுக் கட்சிக்கு 53 பேரும், ஜனநாயக கட்சிக்கு 47 பேரும் உள்ளனர். இதனால், தீர்மானம் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
செனட் சபையிலும் நிறைவேறினால், ட்ரம்பிடம் இருந்து போர் பிரகடனம் செய்யும் அதிகாரம் பறிக்கப்படும். எனவே, இருசபையின் ஒப்புதல் இல்லாமல் போர் குறித்து தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.
ஈரான் இராணுவத்தின் முக்கிய தளபதி உள்ளிட்ட குழுவினர், ஈராக் சென்றிருந்தபோது, ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி, அவரை அமெரிக்கா சமீபத்தில் கொன்றது.
இதனால், இருநாடுகளுக்கும் இடையில் கடுமையான மோதல் நிலை நிலவுகின்றது. இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் போர் மூளும் அபாயம் உருவாகியுள்ளது.