அம்பாறையில் போலி நாணயத்தாள் தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது!

அம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் போலி நாணயத்தாள் தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் ஒன்றுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து அச்சு இயந்திரம் மற்றும் போலி நாணயத்தாள் தயாரிக்கும் தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்பாறை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்
கல்முனை தேசிய புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலை அடுத்து இன்று பகல் 12 மணியளவில் தேசிய புலனாய்வுப் பிரிவினர் ஒலுவில் சந்தைப் பகுதியில் வைத்து 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள் ஒன்றுடன் சந்தேகநபரை கைதுசெய்தனர்.
இதனையடுத்து ஒலுவில் 2ஆம் பிரிவிலுள்ள அவரது வீட்டை சோதனை செய்தபோது அங்கு நாணயத்தாள் அச்சிடும் தாள்கள் மற்றும் அச்சு இயந்திரம் ஆகியவற்றை மீட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் தேசிய புலனாய்வு பிரிவினர் ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.