இலங்கை

சிறையில் உள்ள தக்ஷியுடன் பிஸ்கட் உண்ட சார்ஜன்ட் பணி நீக்கம் !

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான நந்தகுமார் தக்ஷி என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ‘கனேமுல்ல சஞ்சீவ’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக, நந்தகுமார் தக்ஷி என்பவர் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் சார்ஜன்ட் , சந்தேகநபர் நந்தகுமார் தக்ஷியுடன் ஒரு பிஸ்கட்டை இரண்டாகப் பிரித்துப் பகிர்ந்து உண்டதாகவும், சைகைகள் மூலம் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் கடந்த மாதம் 30 ஆம் திகதி இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை உப சேவைக் கடமையில் இருந்தபோது, இலக்கம் 03 சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நந்தகுமார் தக்ஷி என்ற சந்தேகநபரிற்கு பிஸ்கட் கொடுத்ததாகவும், அதனை சந்தேகநபர் பாதி உட்கொண்டதன் பின்னர் மீண்டும் குறித்த சார்ஜன்ட்டுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், அவர் பல சந்தர்ப்பங்களில் சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்திற்கு அருகில் சென்றதாகவும், அவருடன் சைகைகள் மூலம் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் CCTV காட்சிகளைச் சோதனைக்கு உட்படுத்தியதில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக்குற்றத்தின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தலைமறைவாக இருந்த நிலையில், பின்னர் அவரும் அவரைப் போலவே தோற்றமளிக்கும் சந்தேகநபரான நந்தகுமார் தக்ஷி உட்பட ஆறு சந்தேகநபர்கள் நேபாளத்தின் காத்மண்டு நகரிலுள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டு, பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இஷாரா செவ்வந்தி மற்றும் நந்தகுமார் தக்ஷி ஆகிய இரண்டு சந்தேகநபர்களும் தற்போது 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker