ஆப்கானிஸ்தானை வெளியேற்றி சுப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இலங்கை!

2025 ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்றிரவு (19) நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சுப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.
அதேநேரம், இந்த வெற்றியானது ஆப்பானிஸ்தானை போட்டியிலிருந்து வெளியேறவும் வழிவகுத்தது.
இந்தப் போட்டி முடிவுடன் இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் ஆப்கானிஸ்தானை முந்தி சூப்பர் 4 சுற்றுக்கு பங்களாதேஷும் தகுதி பெற்றது.
அதேநேரம், இலங்கை தொடர்ந்து மூன்றாவது வெற்றியுடன்குழு B பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.
அபுதாபி, ஷேக் சயீத் மைதானத்தில் நேற்றிரவு ஆரம்பமாப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரஷித் கான் தலைமையிலான அணியானது முதலில் துடுப்பெடுத்தாடியது.
தனது இன்னிங்ஸின் நிறைவில் இலங்கையின் இளம் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லலேகவின் ஓவரில் மொஹமட் நபி 05 சிக்ஸர்களை விளாசினார்.
இது மந்த நிலையில் இருந்த ஆப்கானிஸ்தானுக்கு வலுகான இலக்கினை நிர்ணயிக்க உதவியது.
ஆப்பானிஸ்தான் சார்பில் அதிகபடியாக மொஹமட் நபி 22 பந்துகளில் 60 ஓட்டங்களை எடுத்தார்.
இறுதி இரண்டு ஓவர்களில் ஆப்கானிஸ்தான் எடுத்த 49 ஓட்டங்களில் நபி மாத்திரம் 46 ஓட்டங்களை எடுத்தார்.
கடைசிக்கு முந்தைய ஓவரில் துஷ்மந்த சமீரவின் பந்து வீச்சில் அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகளுக்கு விளாசியிருந்தார்.
இதனால், அவர்கள் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களை எடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் நுவான் துஷார 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை அதிகபடியாக எடுத்தார்.
170 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர் குசல் மெண்டிஸ் 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
இது சுழற்பந்து வீச்சாளர்ள் ஆதிக்கம் செலுத்தும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற இலங்கை அணிக்கு உதவியது.
போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மெண்டீஸ் தெரிவானார்.