
வளர்ந்துவரும் இந்த நவீன யுகத்தில் அனைத்து விடயங்களிலும் தொழிநுட்பத்தின் உதவி மனிதனுக்கு தேவையாகவே உள்ளது. இருப்பினும் அந்த தொழிநுட்பத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எவ்வாறு பயன்படுத்த கூடாது என்ற விழிப்புணர்வை மனிதன் கொண்டிருக்க வேண்டும்.
தற்காலத்தில் அதிகம் பேசுபொருளாக உள்ளது தான் AI ( artificial general intelligence) (ChatGPT) .
ஒருவகையில் இவை மனிதனின் வேலைகளை இலகு படுத்தினாலும் அவை சில நேரங்களில் மனித மூளையை கட்டுப்படுத்துகின்றன.
(ChatGPT) சாட்ஜிபிடியால் செயற்கை நுண்ணறிவு, மென்பொருள் குறியீடுகளை எழுதுவது, பிழைகளைச் சரிசெய்வது, எளிய தரவு பகுப்பாய்வு போன்ற பணிகளைத் திறம்படச் செய்ய முடியும்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (AI) அசுர வளர்ச்சி, பல துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது அது தொடர்பில் பல குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது.
இதேவேளை, குறிப்பாக, சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சேவைகளின் பயன்பாடு, அடுத்த சில ஆண்டுகளில் ஐடி துறையின் வருவாயைக் கடுமையாகப் பாதிக்கும் என்று ஒரு ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிய துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதாக சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.
இவ்வாறாக பல துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் AI தொழில்நுட்பம் தற்போது மனித உயிரிழப்பு ஏற்பட காரணமாக அமைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் அமெரிக்காவில் (ChatGPT) சாட்ஜிபிடி உடனான உரையாடல்களுக்கு பின்னர் 16 வயது சிறுவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறி பெற்றோர் ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆடம்ரெய்ன் என்ற 16 வயது சிறுவன், உயிரை மாய்த்துக்கொள்வது குறித்த சாட்ஜிபிடி உடன் விவாதித்த போது அதற்கு பதிலளிக்க மறுக்காமல் அதற்கான எண்ணங்களை சாட்ஜிபிடி மேலும் தூண்டியதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா உயர் நீதிமன்றத்தில் தவறான மரணம், வடிவமைப்பு குறைபாடுகள் மற்றும் சாட்ஜிபிடி உடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து எச்சரிக்கத் தவறியதற்காக ஓபன்AI மீது 40 பக்க அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் வளர்ச்சியடைந்த தொழிநுட்பம் மனிதனுக்கு வரமா? சாபமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.