ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த தொலைபேசி கோபுரம் அமைப்பதற்கான வேலைகள் மீளவும் ஆரம்பம்…..

அம்பாறை மாவட்ட, ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான அன்னதான மண்டபம் அமைந்திருக்கும் பகுதியில் தொலைபேசி அலைக்கற்றை கோபுரமொன்றை அமைப்பதற்கான அத்திவார வேலைகள் கடந்த (26.02.2025) அன்று இடம்பெற்று வந்த நிலையில் குறித்த பிரதேசத்தை சூழவுள்ள மக்கள் இதனால் எங்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்து வேலைகளை இடைநிறுத்தி இருந்தார்கள்.
அந்த வகையில் இன்றைய தினம் (18) காலை வேளையில் மீளவும் வேலைகளை ஆரம்பிப்பதற்காக குறித்த நிறுவனத்தினர் வருகை தந்தபோது அயலவர்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதன்போது ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தங்கள் பக்க விளக்கங்களை வழங்கி இருந்தனர். அதனுடன் தொலைபேசி கோபுரத்தினை அமைக்க வந்த நிறுவனத்தின் பிரதி நிதிகளும் விளக்கங்களை வழங்கி இருந்தனர்.
எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அதே நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருந்த நிலையில் முறுகல் நிலை காணப்பட்டது. மேலதிக நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் மேலும் அதனை முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்கள்.
இவ்வாறு இருக்க திட்டமிட்டபடி தொலைபேசி கோபுரம் அமைப்பதற்கான வேலைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.