இலங்கை

பாராளுமன்றத்தின் தனது கன்னி உரையிலே கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை, மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கோடீஸ்வரன் எம்.பி முழக்கம்

(லோ.கஜரூபன்)

இந்த நாட்டில் புரையோடிப் போயிருக்கும் இனப் பிரச்சினைக்கான தீர்வினை ஜனாதிபதி தனது அக்ராசன உரையிலே கூறாததை இட்டு நாங்கள் மிகவும் கவலை அடைகின்றோம் என்று மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று (04) 10வது பாராளுமன்றத்தில் தனது கன்னி உரையினை ஆற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கவித்திரன் கோடீஸ்வரன்,

இந்த நாட்டிலே புரையோடிப் போயிருக்கின்ற இனப் பிரச்சினைக்கான தீர்வினை ஜனாதிபதி அவரது உரையிலே கூறாததை இட்டு நாங்கள் மிகவும் கவலை அடைகின்றோம்.

இன்றைய பாராளுமன்றத்தில் அதிகப்படியான கிட்டத்தட்ட 68 இலட்சம் வாக்குகளை பெற்று ஆட்சி பீடத்திலேயே இருக்கின்ற தேசிய மக்கள் சக்தியினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

விசேடமாக அம்பாறை மாவட்டத்திலே தமிழர்களின் இருப்பை பாதுகாத்து தமிழர்களின் அடையாளத்தை நிலை நாட்டிய எங்களுக்கு வாக்களித்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஜனாதிபதியின் அக்கராசன உரை மூலம் இந்த நாட்டின் இனவாதம் மதவாதமற்ற ஒரு சுபீட்சமான நாட்டை உருவாக்குவதாக அவர் தெரிவித்த கருத்தை நான் வரவேற்கின்றேன்.

தமிழ் மக்களுக்காகிய இந்த இனப் பிரச்சினைக்கான தீர்வு அவர்களுக்கான தீர்வு எட்ட வேண்டிய கடமைப்பாடும் பொறுப்பும் இங்கே இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. கடந்த காலத்திலேயே ஜனாதிபதி அவர்கள் தமிழ் மக்களுக்கான தீர்வை கொடுக்க வேண்டுமென்று, இந்த பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியிலும் பல தடவைகள் கூறி இருந்தார். ஆனால் அவரது அக்ராசன உரையிலேயே அதனைக் காணவில்லை. இதனால் நாங்கள் மன வேதனை அடைகின்றோம்.

எங்களது பிரதேசத்திலே பலதரப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அதனை தீர்க்க வேண்டிய கடமைகளும் பொறுப்புகளும் இருக்கின்றன. அதில் முதலாவதாக, புதிய பிரதேச செயலகங்களும் அதற்கான அதிகாரங்கள் வழங்குவதிலும் இருக்கின்ற பலதரப்பட்ட குறைபாடுகள் காணப்படுகின்றது. இதிலே விசேடமாக அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேசத்திலே பிரதேச செயலகத்துக்கான அமைச்சரவை அங்கீகாரம், நான் நினைக்கின்றேன் 1993 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்றும் கூட இது வரையில் அதற்கு முழு அதிகாரம் வழங்கப்படாமல் இருக்கின்றது.

அதிலே குறிப்பாக கணக்காளருக்கான நிரந்தர நியமனம் அங்கு இருக்கின்ற பொழுதிலும் கூட இன்றுவரை கணக்காளர் ஒருவர் அங்கு வராமல் இருக்கின்றார். தற்காலிக ஒரு கணக்காளரை தவிர நிரந்தரமான ஒரு கணக்காளர் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு பிரதேச மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் வெப்சைட்டிலும் கூட இலங்கையிலே கிட்டத்தட்ட 341 பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றது. அதிலே ஆரம்பத்திலே கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்று சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. ஆனால் அது ஏதோ ஒரு வகையிலே அரசியல் ரீதியாக எடுக்கப்பட்டிருக்கின்றது. திட்டமிட்ட அடிப்படையிலேயே அரசியல்வாதிகளினால் அந்தப் பிரதேச செயலகத்துக்கு வழங்கப்பட இருக்கின்ற அதிகாரம் தடுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பிரதேச செயலகத்துக்குரிய முழு அதிகாரத்தையும் கொடுக்க வேண்டிய கடமைப்பாடு இந்த அரசுக்கு இருக்கின்றது.

அதுமட்டுமல்ல புதிய பிரதேச சபைகளை மாவட்டத்தில் உருவாக்க வேண்டிய கடமைப்பாடும் இருக்கின்றது. ஏனென்றால் 34 தொடக்கம் 50 கிலோமீட்டர் வரை சென்று பிரதேச மக்களுக்குரிய அதிகாரங்கள், தேவைகளை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை அங்கு காணப்படுகின்றது.

கோமாரியை மையப்படுத்தி ஒரு பிரதேச செயலகமும் மல்வத்தையை மையப்படுத்தி ஒரு பிரதேச செயலகமும் உருவாக்கப்பட வேண்டிய கடமைப்பாடு இருக்கின்றது.

அதேபோல் புதிய கல்வி வளையங்கள் உருவாக்கப்பட வேண்டும். கல்முனையை மையப்படுத்திய 57 தமிழ் பாடசாலைகள் இருக்கின்றன. இதனை மையப்படுத்தியதான ஒரு வலயக் கல்வி அலுவலகத்தை உருவாக்கி கல்வி வளர்ச்சியை மேம்படுத்த உதவுமாறு இந்த இடத்திலே கேட்டுக் கொள்கின்றேன்.

அடுத்து வழங்கள் சுரண்டப்படுகின்ற நிலைமை அம்பாறை மாவட்டத்திலேயே கூடுதலாக காணப்படுகின்றது.

திருக்கோவில் பிரதேசத்தில் இல்மநைட் அகன்று எடுக்கின்ற ஒரு வேலை திட்டத்தை செய்து வருவதோடு, அதற்கான பூர்வாங்க வேலைகளை செய்து வருவதாக அறிய கிடைக்கின்றது. இன்று கூட அதற்காக ட்ரோன் கேமராக்கள் மூலம் பிரதேசங்களை அடையாளப்படுத்துகின்ற செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக நாங்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது.

இந்த நிலை ஏற்பாட்டால் மிகவும் பாரதூரமான ஒரு பிரச்சினையை அந்த பிரதேச மக்கள் எதிர்நோக்க வேண்டி வரும். இதனை விசேடமாக தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. இல்மனைட் அகழ்கின்ற பொழுது அந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற வளங்கள் முற்றுமுழுதாக அழிவடையும் நிலைக்கு தள்ளப்படும் மக்களுக்கான வேலைவாய்ப்பு, அது போன்று பூர்வீகமாக இருக்கின்ற நிலங்கள் அழிவடையக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker