மத்தியகிழக்கு நாடுகளில் சிக்குண்டிருக்கும் பெண் தொழிலாளர்களை உடனடியாக நாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோரி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினர் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!!!!

ஓமான் மற்றும் ஏனைய மத்தியகிழக்கு நாடுகளில் சிக்குண்டிருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்ற பெண் தொழிலாளர்களை உடனடியாக நாட்டிற்கு திருப்பி கொண்டு வரவேண்டும் என கோரி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினர் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் முன்பாக இன்று (01) காலை 10.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தார்கள்.
வெளிநாடு வேலைக்காக செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய், வெளிநாடு செல்லும் தாய்மார்களின் குழந்தைகளின் வயதெல்லையை அதிகரி, போலி முகவர்களை கைது செய், பணிப்பெண்ணாக வேலைக்கு செல்வோரின் பாதுகாப்பை உறுதி செய் என்பது போன்ற பல வாசகங்களை ஏந்தியதாக குறித்த கவனயீர்ப்பு செயற்பாடு இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினர்கவனயீர்ப்பு செயற்பாட்டை தொடர்ந்து பேரணியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தை வந்தடைந்து, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பாபகரன் அவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தங்கள் கோரிக்கை அடங்கிய மகஜர்களை வழங்கினார்கள்.