ஆலையடிவேம்பு பிரதேச சதொச நிலையத்திலிருந்து பொருட்களை ஏற்றி செல்லும் நடவடிக்கை தடுத்து நிறுத்தம்! பா.உ கலையரசன் நேரடி தலையீடு: மாற்று பிறிதொரு இடத்திற்கு சாதகமான நிலை…

ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குள் இயங்கி வந்த சதொச நிலையத்தின் கட்டிட ஒப்பந்த காலம் நிறைவடைந்த நிலையில் பிறிதொரு பிரதேசத்திற்கு குறித்த நிலையம் இடமாற்றம் பெற்று செல்வதாக அறியக்கூடியதாக இருந்து வந்த நிலையில்.
ஆலையடிவேம்பு மக்களுக்கு குறித்த சதொச மிகவும் தேவை உடையதாக காணப்படுகின்றது என இதனை வலியுறுத்தி ஆலையடிவேம்பு பிரதேச பொது அமைப்புக்கள் குறிப்பாக ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கத்தினர் சதொச நிலையத்தினை ஆலையடிவேம்பு பிரதேசத்தினுள் நிலைநிறுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இவ்வாறாக இருந்து வருகின்ற நிலையில் குறித்த இடத்தை விட்டு செல்வதற்கு பொருட்களை இன்றைய தினம் (03.05.2023) புதன்கிழமை ஏற்றி செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில்.
ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இதனை தடுத்து நிறுத்தி ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சதொச அமையப்பெற வேண்டும் என இன்றைய தினம் கவனயீர்ப்பு ஒன்றினையும் மேற்கொண்டிருந்தார்கள்.
குறித்த கவனயீர்ப்பு இப்பிரதேசத்தில் இருந்து இந்த சதொச அகற்றப்படும் ஆனால், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படும் எனும் நோக்குடன் ”ஏழைகளின் வயிற்றில் அடியாதே” ”சதொசவை எமது பிரதேசத்தில் இருந்து அகற்றாதே” என்றவாறு சதொசவின் வாசலில் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை காட்சிப்படுத்தப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த விடயத்தினை அறிந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்கள் விரைந்து வருகை தந்து இது தொடர்பாக பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
மேலும் இன்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ளே சதொச பிறிதொரு இடத்திற்கு மாற்றப்படுவதற்கான பொருத்தமான இடம் தெரிவு செய்யப்பட்டு ஏனைய ஒரு சில விடயங்களில் இழுபறி நிலையில் இருப்பதையும் ஆராய்ந்து அதற்கான தீர்க்கமான முன்னெடுப்புகளையும் முன்னெடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதனுடன் ஆலையடிவேம்பு பிரதேச தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதி நிதிகள் அக் கட்சியின் தலைவர் பா.உ சிவநேசத்துரை சந்திரகாந்தன் அவர்களும் குறித்த சதொச விடயம் தொடர்பாக அறிவித்ததை அடுத்து இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர், அமைச்சின் செயலாளர் அவர்களுடன் உரையாடி சாதகமான நிலையினையும் பெற்றுக்கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கத்தினரின் கவனயீர்ப்பு செயற்பாட்டிற்கு ஆலையடிவேம்பு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர், பிரதேச சமூகப் பிரதிநிதிகள் என்பவர்கள் வருகைதந்து ஒத்துழைப்புக்களை வழங்கி இருந்தமையும் சிறப்பிற்குரியது.