ஆலையடிவேம்பு பிரதேச கண்டக்குழி குளத்தினை தனிநபர் மண்ணிட்டு நிரப்பி அபகரிக்க முயற்சி! பிரதேச மக்களின் அவதானத்துடனும், பிரதேச செயலாளர் தலையீட்டுடனும் தடுக்கப்பட்டது.

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை ஆகிய பிரிவுக்குட்பட்ட கண்டக்குழி குளத்தின் ஒரு பகுதியினை மண் இட்டு இயந்திரத்தின் உதவியுடன் நிரப்பும் செயற்பாடு தனிநபர் ஒருவரினால் இன்று (26) இடம்பெற்றதாகவும் இதனை அவதானித்த மக்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பாபகரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பாபகரன் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குறித்த இடத்தினை பார்வையிட்டதுடன் அவரின் தலையீட்டினால் தனிநபர் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது
குறித்த பகுதி அண்ணளவாக ஆலையடிவேம்பு பொது மயானத்திற்கு எதிரேயும், அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியில் இருந்து சிறிதே தூரத்திலும் காணப்படுகின்ற கண்டக்குழி குளத்தின் ஒரு பகுதியாக காணப்படுகின்றது.
குறித்த குளத்தின் ஒரு பகுதியினை இவ்வாறு மாற்று தனிநபர் மண்ணிட்டு நிரப்பி பயன்படுத்தவோ, அபகரிக்கவோ செயற்படுவது சட்டவிரோதமான செயற்பாடாக இருப்பதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன் இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள், அமைப்புக்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் குறித்த நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைக்கின்றார்கள்.
மேலும் குறித்த பகுதியின் அருகாமையில் காணப்படுகின்ற அரிசி ஆலை ஒன்றில் இருந்து குறித்த குளப்பகுதிக்குள் கழிவான உமிகளை கொட்டி இருப்பதனையும் காணக்கூடியதாக இருப்பதுடன், இந்த செயற்பாடு குளத்தின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்திருக்கின்றது.
குறித்த கழிவான உமிகளை குளத்தினுள் கொட்டியிருப்பதனை வருகை தந்திருந்த ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பாபகரன் அவர்கள் பார்வையிட்டதுடன் அதனை தடுப்பதற்கான முறையான நடவடிக்கையினையும் முன்னெடுத்திருந்தார்.