இந்தியா அணிக்கெதிரான தொடரிலிருந்து பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் விலகல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டமீம் இக்பால், இந்தியா அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார்.
டமீம் இக்பால், தனது சொந்த காரணங்களுக்காக இத்தொடரிலிருந்து விலகியுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
டமீம் இக்பாலின் மனைவி இரண்டாவது குழந்தையை பிரசவிக்கவுள்ளமையினால், டமீம் இக்பால், தனது மனைவியுடன் நேரத்தை செலவிட எண்ணியுள்ளார். ஆகையால் அவர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.
டமீம் இக்பாலுக்கு பதிலாக இம்ரூல் கைஸ் பயிற்சி முகாமுக்கு அழைக்கப்பட்டுள்ள போதும், அவர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்படுவாரா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கூறியுள்ளது.
சமீபகாலமாக மோசமாக விளையாடிவரும் டமீம் இக்பால், இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண தொடரில், அரைசதம் அடங்களாக எட்டு இன்னிங்ஸ்களில் 235 ஓட்டங்களை குவித்தார். சராசரி 29.37 ஆகும்.
இதன் பிறகு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக டமீம் இக்பால் தலைமையிலான பங்களாதேஷ் அணி, இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
அதிலும் டமீம் இக்பால், மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். இத்தொடரில் அவர் வெறும் 21 ஓட்டங்கள் மட்டுமே பெற்றார். அத்தோடு பங்களாதேஷ் அணி இத்தொடரில் 0-3 என இலங்கை அணியிடம் படுதோல்வியடைந்தது.
இதனைத் தொடர்ந்து, கடும் விமர்சனத்துக்குள்ளான டமீம் இக்பால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் மற்றும் முத்தரப்பு ரி-20 தொடரில் இருந்து விலகினார்.
இதனையடுத்து, தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்காக தேசிய கிரிக்கெட் லீக்கின் தொடரில் விளையாடி தன்னை நிரூபித்துக் கொண்ட டமீம் இக்பால், இந்தியா அணிக்கெதிரான தொடரில் பெயரிடப்பட்டார். இந்த நிலையிலேயே 30 வயதான இடது கை துடுப்பாட்ட வீரரான டமீம் இக்பால், தனது தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பங்களாதேஷ் அணி, அங்கு சென்று மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
நவம்பர் 3ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இத்தொடரில் நடைபெறும் டெஸ்ட் தொடரின், ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெறவுள்ள ரி-20 தொடரின் முதல் போட்டி, நவம்பர் 3ஆம் திகதி டெல்லியில் நடைபெறவுள்ளது.