ஆன்மீகம்

பயம் போக்கும் பைரவர் வழிபாடு….

சிவாலயங்களில் நீங்கள் சன்னதியை சுற்றி வரும் போது வட கிழக்குப் பகுதியில் பைரவர் வீற்றிருப்பதைப் பார்த்து இருப்பீர்கள். சிவபெருமானின் முக்கிய அம்சமான இவரை ஒவ்வொருவரும் அவசியம் வழிபட வேண்டும்.

ஏனெனில் பைரவரை மனம் உருகி வழிபடாவிட்டால், நீங்கள் சிவாலயத்துக்கு சென்று வழிபட்டதற்கான நோக்கமே பயன் தராமல் போய் விடக் கூடும்.

அந்த அளவுக்கு பைரவர் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தவர். பைரவர் என்றால் நம் பயம், துன்பம், துயரம் எல்லாவற்றையும் போக்கி நம்மை காப்பவர் என்று பொருள். வாழ்வில் உங்களுக்கு எப்போதாவது இக்கட்டான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால்… மனம் கலங்காமல், நம்பிக்கையுடன் “பைரவா… காப்பாற்று’’ என்று அழைத்துப் பாருங்கள், காகம் விரட்டும் போது கோழி தன் குஞ்சுகளை எப்படி தன் இறக்கைக்குள் வைத்து காப்பாற்றுகிறதோ, அப்படி ஓடோடி வந்து பைரவர் உங்களை காப்பாற்றுவர்.

பைரவரை நீங்கள் தொடர்ந்து தினமும் வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் விலகி, தீ வினைகள் அழிந்து, பிறவிப் பயனை உணர்ந்து, சுப மங்களமாக, தலை குனியா வாழ்க்கையை நிச்சயம் வாழ்வீர்கள். 8 மற்றும் 64 என்ற எண்ணிக்கையில் பல கோலங்களில் பைரவர் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். பைரவருக்கு சந்தன காப்பு அபிஷேகம் செய்து வழிபடுவது மிக, மிக பிடிக்கும்.

தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, சந்தன மாலை அணிவித்து சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், தேன், அவல் பாயாசம் மற்றும் பழ வகைகளை படைத்து பைரவரை வழிபட்டால் நாம் விரும்பியதை எல்லாம் பைரவர் தருவார். தினமும் பைரவர் காயத்ரியை சொல்லி வந்தால் செல்வம் பெருகும். இது நிதர்சனமான உண்மை.

செல்வத்தை நமக்கு வாரி வழங்கும் அஷ்ட லட்சுமிகள், ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டு தங்களது செல்வ வள சக்தியை மேம்படுத்தி கொள்கிறார்கள். எனவே நாமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவரை வழிபட்டால் மங்காத செல்வ வளத்தை பெறலாம் என்பது ஐதீகமாகும்.

தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி செவ்வாய் தோறும் பைரவரை வழிபட்டு வந்தால் உங்கள் வாழ்வு சிறக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker