பிரதமர் பதவி விலகக் கூடாது என ஏகமனதாக தீர்மானம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யக்கூடாது என பிரதேச சபை தவிசாளர்களும் மேயர்களும் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.
பிரதமருடன் அலரி மாளிகையில் இன்று (27) நடைபெற்ற சந்திப்பின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
மாவட்டத் தலைவர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் ஆகியோர் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மை வாக்குகளால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் பிரதமர் என்றும் மக்களின் இறையாண்மைக்கு பிரதமர் தலைவணங்கினால் அவர் தொடர்ந்தும் அந்த பதவியில் நீடிக்க வேண்டும் எனவும் பிரதேச சபைகளின் தவிசாளர்களும் மேயர்களும் ஏகமனதாக தெரிவித்தனர்.
அதற்கமைய மேற்படி தீர்மானத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து தெரிவிக்கவும் பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் மேயர்கள் தீர்மானித்தனர்.
மஹிந்த ராஜபக்ஷ என்ற பெயரையும் உருவப்படத்தையும் பயன்படுத்தி பாராளுமன்றத்திற்கு வந்த ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு பிரதமரை பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் உண்டு என கூறிய உள்ளுராட்சி மன்ற தலைவர்கள், நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இத்தருணத்தில் அரசாங்கத்தை சீர்குலைத்து சுயாதீனமாக செயற்படுவதற்கு எவ்வித உரிமையும் இல்லை என்றும் குறிப்பிட்டனர்.
அவ்வாறு சுயாதீனமாக செயற்படுவதற்கு தயாராகவிருக்கும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பதிலடி கொடுக்க அடிமட்ட மக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்களும் மேயர்களும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தினால் மட்டுமே வெற்றிகொள்ள முடியும் என தெரிவித்த பிரதிநிதிகள், சிரமங்களுக்கு மத்தியில் இவ்வாறான சவால்களை வெற்றிகொண்ட வரலாறு இருக்குமானால் அது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மாத்திரமே எனவும் குறிப்பிட்டனர்.