இலங்கை

நாளை பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு

நாளை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மத்தியில் தடிமன் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் பெற்றோர் உரிய தரப்பினருடன் அல்லது பொது சுகாதார பரிசோதகர்களுடன் தொடர்பு கொண்டு மாணவர்களை பரீட்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று பிரதி பரீட்சை ஆணையாளர் எம் ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெறும் 2021 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 255,062 சிங்கள மொழிமூல பரீட்சாத்திகளும், 85,466 தமிழ் மொழிமூல பரீட்சாத்திகளும் தோற்றவுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில்,காலை 9.30 மணியில் இருந்து 10.30 வரை முதலாவது வினா பத்திரமும் 11.00 மணியில் இருந்து 12.15 மணி வரை இரண்டாவது வினா பத்திரமும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

பரீட்சாத்திகளுக்காக அனுமதி அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. இவர்கள் அனுமதி அட்டையின் மேல் பகுதியை பிரித்து தமது வீடுகளில் பாதுகாப்பாக வைத்து விட்டு மற்றைய பகுதியை பரீட்சை நிலையத்திற்கு கொண்டு சென்று மேற்பார்வையாளரிடம் ஒப்படைத்தல் வேண்டும்.

இவர்களுக்கென நாடளாவிய ரீதியில் 2943 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களை இணைப்பதற்காக 496 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கொவிட் தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காகஇப் பரீட்சை நிலையங்களுக்கு மேலதிகமாக விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் கல்வி வலய மட்டத்தில் ஒவ்வொரு பரீட்சை நிலையங்கள் என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன.

பரீட்சை நிலையங்கள் தொடர்பான விபரங்கள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடத்துவதற்காக சுகாதார பிரிவினருடன் இணைந்து சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொலிஸ், முப்படையினருடைய உதவிகளும் இதற்காக பெறப்பட்டுள்ளன.

தொற்றுக்குள்ளான பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றுவதற்கு பெற்றோர்கள் தடை விதிக்க வேண்டாம். இவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பாடசாலை அதிபருடன் அல்லது பிரதேச பொது சுகாதார பரிசோதகர் மற்றும் மாவட்ட சுகாதார பணிப்பாளரோடு தொடர்புகொண்டு அவர்கள் ஊடாக பிள்ளைகளை பரீட்சை நிலையங்களிற்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை நேரகாலத்துடன் மேற்கொள்ளவும். இறுதி நோரம் வரை காத்திருக்க வேண்டாம் என்றும் பெற்றோரை அறிவுறுத்தினார்.

விசேட பரீட்சை நிலையங்களுக்கு செல்லுகின்ற பரீட்சாத்திகள் தொடர்பாக பெற்றோர்கள் ரப்பிட் அன்டியன் அல்லது பி.சி.ஆர் பரிசோதனையை கட்டாயமாக மேற்கொண்டிருத்தல் வேண்டும். பரீட்சை நிலையங்களுக்கு வருகை தரும் போது பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

தொற்றுக்குள்ளான பரீட்சாத்திகள் தமது பெற்றோர்களோடு நேரடியாக பரீட்சை நிலையங்களிற்கு செல்ல வேண்டும். விசேட பரீட்சை நிலையங்களில் அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள விசேட பரீட்சை அறைகளில் அவர்கள் பரீட்சை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

இது தொடர்பாக தொற்றுக்குள்ளான பரீட்சாத்திகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பரீட்சாத்திகள் தேவையில்லாமல் குழப்பம் அடைய தேவையில்லை.

பரீட்சாத்திகள் பரீட்சை நிலையத்திற்கு செல்லும் பொழுது பென்சில், நீலம் அல்லது கருப்பு நிற பேனை, அழிறப்பர் மற்றும் இடைவேளையின் போது உண்ணுவதற்கான சிற்றுண்டி ஆகிய பொருட்களை மாத்திரமே எடுத்து செல்ல முடியும். வேறு பொருட்கள் பரீட்சை நிலையத்துக்குள் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

பிள்ளைகளுக்கு தடிமன் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் பெற்றோர்கள் உரிய தரப்பினருடன் அல்லது பொது சுகாதார பரிசோதகருடன் தொடர்பு கொண்டு பரீட்சை நிலையத்திற்கு அழைத்து செல்லுதல் வேண்டும்.

மாணவர்கள் உள நெருக்கடிக்கு உள்ளாகாத வண்ணம் பெற்றோர்களும் அதிபர் ஆசிரியர்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பரீட்சையின் போது இரண்டு வினாப்பத்திரங்கள் வழங்கப்படும். இரண்டு வினா பத்திரங்களில் முதலாவது வினாப்பத்திரம் உள சார்பு சம்பந்தமாகவும், இரண்டாவது வினா பத்திரம் பாடத்திட்டம் தொடர்பாகவும் தாய் மொழி, கணிதம் சுற்றாடல், இரண்டாம் மொழி, சர்வதேச மொழி சார்ந்ததாகாக அமைந்திருக்கும்.

இதேவேளை எல்லா வினா தாள்களிலும் பரீட்சை சுட்டெண் கட்டாயம் இடப்பட வேண்டும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker