பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் தரம் – 5ம் ஆண்டு மாணவர்களுக்கான விசேட செயலமர்வு ஊவா மாகாணத்தில்

45 வருடங்களாக பிரித்தானியாவிலிருந்து பல சமய, சமூக பணிகள் மட்டுமன்றி பல கல்விச் சேவைகளையும் செய்துவரும் சைவ முன்னேற்றச் சங்கத்தினால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய மாகாணங்களிலிருந்து விண்ணப்பித்திருந்த பிந்தங்கிய 142 பாடசாலைகளைச் சேர்ந்த 4862 தரம் – 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட செயலமர்வை நடாத்தி வருகின்றது.
அதில் ஒரு கட்டமாக பதுளை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கான செயலமர்வுக்கான வினாத்தாள்களை வழங்கும் நிகழ்வு இன்று (07) ஊவா மாகாண கல்வி அபிவிருத்தி நிலையத்தில் தமிழ் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.கார்தீபன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உதவிக் கல்விப் பணிப்பாளர், கோட்டக்கல்விப்பணிப்பாளர், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு வருடமும் ராகசங்கமம் எனும் இசை நிகழ்ச்சி மூலம் வரும் நிதியைக் கொண்டு தரம் -5ம் ஆண்டு, O/L மற்றும் A/L எழுதவிருக்கும் பிந்தங்கிய பாடசாலைகளைச் சேர்ந்த வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மாணவர்களுக்கு நடாத்தி வருகின்றனர். அது மட்டுமன்றி பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான வசதிகுறைந்த மாணவர்களுக்கும் மாதாந்த புலமைப்பரிசில்களையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பல சேவைகளைச் செய்துவரும் சைவ முன்னேற்றச் சங்கத்திற்கு எமது ஊடகம் சார்பாகவும் 45வது ஆண்டு விழாக்கான நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.