பனங்காடு பாலத்தினை கடந்து பனங்காடு, மகாசக்திபுரம் , புளியம்பத்தை, கவாடாப்பிட்டி, கண்ணகிபுரம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் இணைப்பு!

-M.கிரிசாந்-
அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு, மகாசக்திபுரம் , புளியம்பத்தை, கவாடாப்பிட்டி, கண்ணகிபுரம் ஆகிய பிரதேச மக்களுக்கு பல வருடங்களாக குடிநீர் தேவைப்பாடு காணப்பட்டு வந்த நிலையில் பிரதேச மக்களால் பலரிடமும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு அதற்காக பல முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தநிலையில்.
குறித்த மக்களுக்கு பனங்காடு பாலத்தினை கடந்து குடிநீரினை கொண்டு செல்வதற்கு தற்போது நீர் வழங்கல் அமைச்சின் கீழ் 100மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மக்களுக்கு குடிநீரினை பெற்றுக்கொடுப்பதற்கு பலரும் முயற்சிகள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் அம்பாறை மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்கள் இதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு இருந்தார் என்பதுடன்.
பாராளுமன்றத்தில் இது தொடர்வாக விசேட உரைகள் மேற்கொண்டதுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் அவர்கள் அதற்காக உடனடியாகவே பதிலளித்தலுடன் குறித்த விடயத்தை கவனத்தில் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது மேலும் நீர் வழங்கல் அமைச்சுக்கு கோரிக்கை கடிதங்கள் போன்றவற்றை மேற்கொண்டமை குறித்த குடிநீர் வழங்கல் செயற்பாடுகளுக்கு பெரிதும் பக்கபலமாக அமைந்திருந்தது.
மேலும் ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த பி.எச்.கிரு அவர்கள் நீர் வழங்கல் அமைச்சர் அவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு குறித்த விடயங்களை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் நீர் வழங்கல் அமைச்சின் இப் பகுதிக்கான இணைப்பாளர் ஆகவும் செயற்பட்டு வருகின்றமை குறித்த குடிநீர் வழங்கல் செயற்பாடுகளுக்கு பக்கபலமாக அமைந்துள்ளது.
இது எவ்வாறு இருக்கையில் மிக விரைவில் பிரதேச மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் பயனடைய இருக்கின்றார்கள்.
இவ்வாறு இருக்கையில் பிரதேச மக்கள் குறித்த பனங்காடு பாலத்தினை கடந்து குடிநீரினை கொண்டு வருவதற்கு பக்கபலமாக இருந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று செயற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்ட மக்கள் பிரதிநிதிகள் , அதிகாரிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் மக்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.
குறித்த திட்டம் உறுதிப்படுத்தப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளநிலையில் ஆரம்பகட்ட நடவடிக்கையினை பார்வையிட நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் இயக்குதல் மற்றும் பராமரிப்பு பொறியியலாளர் பி.மயூரன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட பொறியியலாளர் ந.லோகிஸ் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன், கணக்காளர் க.பிரகஸ்பதி சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் முன்னேற்பாடுகள் தொடர்பில் கடந்த (10) வெள்ளிக்கிழமை குறித்த பிரதேசத்திற்கு சென்று ஆராய்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.