இலங்கை

த.தே.ம.மு கட்சியை நிறுவனமயப்படுத்தவும், தமிழ் தேசிய கட்சிகளுடன் பயணிக்கவும் தீர்மானம்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கட்டமைப்புக்களை நிறுவனமயப்படுத்தி வலுப்படுத்த உள்ளதாகவும், எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய அரசியலினை சிதைக்காத வகையில் தமிழ்த்தேசிய பரப்பில் பயணிக்கும் கட்சிகளுக்குள் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி ஒற்றுமையுமையுடன் பயணித்து எமது அரசியல் இலட்சியத்தையும், பொருளாதார சுபீட்சத்தையும் வென்றெடுக்க போராட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், ஊடக பேச்சாளரும், யாழ்.மாநகர சபை முதல்வருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்றைய தினம்(புதன்கிழமை) அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், “திட்டமிட்டு சிதைக்கப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கட்டமைப்புக்களை நிறுவனமயப்படுத்தி வலுப்படுத்துவது தொடர்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களுடான சந்திப்பு ஒன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் மாநகர முதல்வருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் கடந்த 9.11.2021 அன்று வவுனியாவில் நடைபெற்றது.

கடந்த பல ஆண்டுகளாக தென்னிலங்கை சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த்தேசிய அரசியல் திட்டமிட்டு சிதைக்கப்பட்டுவருகின்றது. அதன் தொடர்ச்சியாகவே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும் சிதைத்து அழிக்கும் முயற்சியும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

தமிழ் தேசியவாத சக்திகளை சிதைத்து அழிக்கும் வகையில் நிகழ்த்தப்படும் இச் சதித் திட்டங்களை முறியடித்து தமிழ்த்தேசிய அரசியலை நீர்த்துப்போகச் செய்யாமல் ஒன்று பட்டு பேரெழுச்சி கொள்ளும் வகையில் செயற்படவேண்டிய காலம் இது.

அண்மை காலத்தில் எமது அமைப்பிற்குள் இருந்து அமைப்பை சிதைப்பதன் மூலம் தமிழ் தேசிய சக்திகளை பல கூறிடும் சதித்திட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் விரும்புகின்ற வகையில் தமிழ்த்தேசிய பரப்பில் பயணிக்கின்ற கட்சிகளின் ஒற்றுமையினைக் குலைத்து சிறு சிறு காரணங்களுக்காக தமிழ்த்தேசிய அரசியலைக் கூறுபோடுகின்றமை சிங்கள தேசியவாதத்தை வலுப்படுத்துகின்றது.

அந்த வகையில் இக் காலத்தின் தேவையறிந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கட்டமைப்புக்களை நிறுவனமயப்படுத்தி வலுப்படுத்துவது என இக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் தமிழ்த்தேசியம் சார்ந்து இயங்கும் கட்சிகள் மேற்கொள்ளும் மக்கள் நலன் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளிலும் முழுமனதுடன் பங்குபற்றுவது என்றும், எதிர்காலத்தில் தமிழ்த்தேசிய அரசியலினை சிதைக்காத வகையில் தமிழ்த்தேசிய பரப்பில் பயணிக்கும் கட்சிகளுக்குள் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி ஒற்றுமையுமையுடன் பயணித்து எமது அரசியல் இலட்சியத்தையும், பொருளாதார சுபீட்சத்தையும் வென்றெடுக்க போராடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சிவகுரு இளங்கோ, மன்னார் மாவட்ட அமைப்பாளர் சகாயம், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் யெகநீதன், பொருளாளர் நாதன், திருகோணமலை மாவட்ட முன்னாள் அமைப்பாளர் கரிஹரன், வவுனியா மாவட்ட நிர்வாகிளான தமிழழகன், முன்னாள் நகரசபை உறுப்பினர் யானுஐன், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் முபிள்யான், முல்லைத்தீவு மாவட்ட செயற்பாட்டாளர் சங்கீர்த்தன், முன்னணியின் மூத்த உறுப்பினர்கள் பார்த்திபன், சி. த. காண்டீபன், விளையாட்டு துறை பொறுப்பாளர் வீரா, யாழ்மாவட்ட, மகளீர் அணி செயற்பாட்டாளரும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினருமான திருமதி கௌசலா சிவா, இளைஞர் அணி தலைவரும் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினருமான லகிந்தன், ஊடக துறையை சார்ந்த விஷ்ணுகாந்த், அலெக்ஸ் ஆகியோர் உட்பட பல மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.“ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker