இலங்கை

நுகர்வோரைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் கொள்கை!

நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களின் தொடர்பாடல் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளுக்காகத் தொலைத்தொடர்பு மேம்பாட்டுக் கட்டணத்தைப் பயன்படுத்துவதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நோக்கமாக இருக்கின்றதென, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக்க தெரிவித்தார்.

தொலைத்தொடர்பு என்பது, தேசிய பொருளாதாரத்தின் முக்கிய பங்காளியாக அமைந்திருப்பதால், இலாபத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்படாமல், தேசிய பொருளாதாரத்தை இலக்கு வைக்கும் வேலைத்திட்டமொன்றைச் செயற்படுத்துமாறு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனையின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

“கிராமத்துக்குத் தொடர்பாடல்” என்ற எண்ணக்கருவுக்கு அமைய, இன்று (14) முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற வீடியோ தொழில்நுட்பத்துடனான ஊடகச் சந்திப்பின் போதே, பணிப்பாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“கிராமத்துக்குத் தொடர்பாடல்” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், இவ்வாண்டு இறுதிக்குள் 10 மாவட்டங்களுக்கான 100 ப்ரோட்பேண்ட் கவரேஜ் திட்டம் முழுமைப்படுத்தப்படும் என்றும் 2022 இறுதிக்குள், ஏனைய மாவட்டங்களும் உள்ளடங்களாக முழு நாட்டுக்குமான ப்ரோட்பேண்ட் கவரேஜ் வசதிகளை வழங்குவதற்கான திட்டமிடல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும், பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்தத் தொடர்பாடல் சேவை வழங்குநர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுக்க, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் “கிராமத்துக்குத் தொடர்பாடல்” வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் தொலைத்தொடர்புக் கோபுரங்களுக்கான 50 சதவீதச் செலவை, தொலைத்தொடர்புகள் அறக்கட்டளை ஏற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்தத் தொலைத்தொடர்புக் கோபுரங்கள், இதற்கு முன்னர் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டன என்றும் ஆனால் இம்முறை உள்நாட்டிலேயே அவை நிர்மாணிக்கப்படுவதால், புதிய பொருளாதாரத் துறையொன்றைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளது என்றும், பணிப்பாளர் நாயகம் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

கவரேஜ் வலயங்களில் பொருத்தப்படும் தொழில்நுட்ப உபகரணங்களானவை, தற்போது 4G தொழில்நுட்பத்துடன் பயன்படுத்தப்பட்டாலும் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படும் தொழில்நுட்பப் புரட்சியுடன், அவை 5G தொழில்நுட்பத்துடன் இணையும் வகையிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஒன்லைன் கட்டமைப்பினூடாகப் பணிகளை மேற்கொள்வதென்பது, அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணக்கூடியதாகவுள்ள முன்னேற்றமாக உள்ளது. எதிர்காலத்தில் இலங்கையிலும் அவ்வாறானதொரு நிலைமையைக் காணக்கூடியதாக இருக்குமென்றும் கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக, ஒன்லைன் சேவையின் தேவை 40 சதவீதமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்பாடல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, வெளிநாட்டு முதலீட்டாளர்களை உள்ளீர்க்கும் காலம் கனிந்துள்ளதெனத் தெரிவித்த தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, தற்போது காணப்படும் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயை, இதன் மூலம் 1.8 மில்லியன் வரை அதிகரித்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தது. அந்தத் தொகையை, 2024 இல் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துக்கொள்ள முடியுமென்றும் சுட்டிக்காட்டியது.

ஃபைபர் வசதிகளினூடாக, நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இணையவழிக் கல்வியை நோக்கி எதிர்காலத்தில் பலப்படுத்துவது அரசாங்கத்தின் இலக்காகக் காணப்படுகிறது. ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், கணினித் தொழில்நுட்பம் போன்ற பாடத்திட்டங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் எனும் வேலைத்திட்டம் மிகவும் உதவி புரியுமென்றும் கல்வி அமைச்சுடன் இணைந்து, அதனைத் தற்போது ஓர் ஒழுங்குமுறைத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அந்தத் திட்டத்தின் ஊடாகத் தற்போது வெற்றிகரமான முன்னேற்றத்தைக் காணக்கூடியதாக உள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டது.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க பணிப்பாளர் நாயகம் அவர்கள், “கிராமத்துக்குத் தொடர்பாடல்” வேலைத்திட்டத்தைக் கருத்திற்கொண்டே, அனைத்துத் தொலைத்தொடர்புக் கட்டணங்களையும் அரசாங்கம் குறைத்துள்ளது என்றும் தொலைத்தொடர்புகள் சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இதன்மூலம், பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைக்கப்பெறுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழில்நுட்பம் மற்றும் அதன் பாவனை தொடர்பான திட்டமிடல்கள் என்பன நாட்டுக்குத் தேவை என்றும் புதிய திருத்தங்கள் மூலம், cyber security முகவர் நிறுவனமாகச் செயற்பட, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தயாராக இருக்கின்றதென்றும், ஓஷத சேனாநாயக்க அவர்கள் தெரிவித்தார்.

தொலைத்தொடர்புகள் துறையை மேம்படுத்தும் விடயத்தில் நுகர்வோரைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கின்றது என்றும் தெரிவித்த சேனாநாயக்க, நுகர்வோர் பொதுமக்கள், தங்கள் தொலைபேசி எண்ணை மற்றொரு வலையமைப்புக்கு மாற்ற அனுமதிக்கும் Number Portability சேவையைச் செயற்படுத்தும் நடவடிக்கையின் அடுத்த கட்டமாக, அனைத்துத் தொலைபேசிச் செயற்படுத்துநர்கள் ஊடாக மத்திய அனுமதி நிறுவனம் மற்றும் அமைப்புகளை நிறுவுவதன் மூலம், இயக்கக் கட்டமைப்பை முறைப்படுத்தத் தேவையான சட்டச் செயல்முறைக்கு அங்கிகாரம் கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“கிராமத்துக்குத் தொடர்பாடல்” வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் ஸ்ரீயானி மாவெல்ல, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் போட்டித்திறன் பிரிவின் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபான்கொட ஆகியோரும், இந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker