ஐ.தே.க.வுக்கு எதிரான தரப்பினருக்கே ஆதரவு வழங்குவோம்: சுதந்திரக் கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு எதிரான தரப்பினருக்கே ஆதரவளிக்கும் என்பதில் உறுதியாக இருக்கிதென நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வாழ் ஒட்டு மொத்த மக்களும், விரும்பத்தகாத ஒரு பிரதமராக ரணில் விக்கிரமசிங்க காணப்படுகிறார் எனவும் திலங்க சுமத்திபால குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மக்களால் நிராகரிக்கப்பட்ட பிரதமர் ஒருவருடன் இணைந்து, இனியும் பயணிக்க நாம் தயாராக இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பொதுச் சின்னத்தில் களமிறங்கினால் மட்டுமே, அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொள்ளத் தயாரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ள நிலையில் திலங்க சுமத்திபால இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.