ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) வேண்டிய பாரிய கையெழுத்து வேட்டை மூன்றாம் நாளாகிய இன்று 3000 கையெழுத்துக்களை எட்டியது: தன்னார்வ ஏற்பாட்டுக்குழு…

-கிரிசாந் மகாதேவன்-
அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேசம் அண்ணளவாக 26,941 மக்கள் தொகையை கொண்டு காணப்படுகின்ற போதிலும் ஆலையடிவேம்பு பிரதேச பகுதியில் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் ஒன்று இல்லாமல் மக்கள் தொலைதூரங்களுக்கு சென்று குறித்த சேவையைப் பெற்றுக்கொள்ளும் அவல நிலையில் பெரிதும் சிரமங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வாழ்ந்து வருகின்ற நிலையில்.
பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையாக காணப்படுகின்ற குறித்த வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) குறைந்தது ஒன்றையாவது நிலைநிறுத்த வேண்டும் என வங்கிகளை வலியுறுத்தும் வகையில் மேற்படி கோரிக்கை அடங்கிய ஆவணத்திற்கு 5000 பேரின் கையெழுத்து வேண்டி கையெழுத்து வேட்டை தன்னார்வம் கொண்டவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் மூன்றாம் நாளாகிய இன்றைய தின முடிவில் 3000 கையெழுத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு இலக்கை நோக்கிய வெற்றிப்பாதையில் சென்று கொண்டு இருக்கின்றது.
குறித்த கையெழுத்து வேட்டை இடம்பெற்று வருகின்ற நிலையில் இதற்கு சாதகமான சமிக்ஞை ஒன்று ஏற்பாட்டு குழுவினருக்கு பிரதான வாங்கி நிறுவனம் ஒன்றில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது என்பதுடன் இவ் தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் வேண்டிய கையெழுத்து வேட்டை கட்டம் கட்டமாக கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளுடன் பிரதேச சமூக அமைப்புக்கள் மற்றும் தன்னார்வம் கொண்டவர்களின் ஒத்துழைப்புடன் ஆரவாரம் இல்லாமல் இடம்பெற்று வருகின்றது.
குறித்த தன்னார்வ ஏற்பாட்டுக்குழுவினரினால் ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று, வச்சிக்குடா, ஆலையடிவேம்பு, நவக்காடு, கோளவில்,பனங்காடு, கண்ணகிகிராமம், அளிக்கம்பை என அனைத்து பிரதேச பகுதிகளையும் உள்ளடக்கியதாக சமூக நலனில் அக்கறை கொண்டு மாறுபட்ட பல திட்டங்கள் கைவசம் உள்ள நிலையில் வெற்றி பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.