இலங்கை

கல்முனையில் சமூகங்களின் ஒற்றுமை அவரவர்களுடைய நீதியான, நிருவாக நடைமுறையைக் கையாள்வதற்குரிய அடிப்படைகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலேயே தங்கியுள்ளது… பாராளுமன்ற உறுப்பினர் -கலையரசன்

கல்முனையில் இரண்டு சமூகங்களையும் ஒற்றுமைப்படுத்த வேண்டுமாக இருந்தால் அவரவர்களுடைய சுதந்திரமான, நீதியான, நிருவாக நடைமுறையைக் கையாள்வதற்குரிய அடிப்படைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட அரச காணியை முற்பட்ட முஸ்லிம் நபரொருவர் அடாத்தாக மண் நிரப்பி ஆக்கிரமிக்க முற்பட்டார். இச் செயற்பாட்டினைத் தடுத்து நிறுத்திய கிராம சேவையாளரை அக்குறித்த நபர் தாக்க முற்பட்டு கல்முனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் .

இன்றைய தினம் மேற்படி சம்பவம் நடைபெற்ற இடத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உள்ளிட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் வருகை தந்து பார்வையிட்டனர். இவ்வாறு மேற்படி இடத்தினைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழாம் பார்வையிட்டு கொண்டிருந்த போதும் அங்கு கூடிய சில சகோதர இனத்தவர் குழப்பம் ஏற்படுத்தினர்.

இதற்கு முன்னர் குறித்த நபரால் கடலோர பாதுகாப்பு எல்லைக்குட்பட்ட மேற்குறித்த இடத்தில் மண் இட்டு அபகரிக்க முற்பட்ட போது கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு மண் அகற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கல்முனை 1 கிராம சேவகர் பிரிவிலேயுள்ள அரச காணியொன்றில் மண் இட்டு நிரப்பும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நடவடிக்கை இங்குள்ள முஸ்லீம் தனிநபரால் மேற்கொள்ளப்பட்ட விடயம். இதனை கிராம சேவகர் தடைசெய்துள்ளார். கிராம சேவகர் தமது கடமையை முன்னெடுத்த போது அவர் தாக்கப்பட்டுள்ளார். இந்த இடத்தை நாங்கள் பார்வையிட்ட போது அரச காணியென்ற விளம்பரப்பலகை அகற்றப்பட்டு மண் நிரப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு அவ்வாறான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. மீளவும் இவ்விடயம் இங்கு நடைபெற்றுள்ளது.

 

தமிழ் மக்களுடைய பூர்வீக இடங்கள் முஸ்லீம் நபர்களால் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்படுவதும், இங்குள்ள மக்களை சுதந்திரமாக வழ முடியாத சூழலை உருவாக்குவதுமான செயற்பாடுகள் இங்கு இடம்பெறுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் இந்தப் பிரதேசத்தில் தொடர்ச்சியான ஒரு வன்முறையை உருவாக்குவததாகவே இருக்கின்றது. தமிழ் மக்களின் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தாமல் இழுத்தடித்து அந்தப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அரச காணியை ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கையை இந்த கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படக் கூடாது என்று எண்ணுகின்ற அரசியல்வாதியும், அவருடன் சேர்ந்த நபர்களுமே இவ்வாறான பணிகளைச் செய்கின்றார்கள்.

கடந்த மாதம் துறைநீலாவணையில் இவ்வாறான சம்பவம் நடைபெற்று அது தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது இங்கு இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக இது இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது.

இங்கு வாழுகின்ற சமூகங்களை ஒன்றிணைக்க வேண்டுமானால் ஒரு சமத்துவமான, நடுநிலையான, நியாயமான வேலைத்திட்டங்கள் இங்கு முன்னெடுக்கப்பட வேண்டும். அதை விடுத்து இவ்வாறான ஆக்கிரமிப்புகள் இடம்பெறும் போது அது சமூகங்களுக்கிடையில் பாதிப்பினை ஏற்படுத்தும். இங்கிருக்கின்ற இரண்டு சமூகங்களையும் இணைக்க வேண்டுமாக இருந்தால் அவர்களுடைய சுதந்திரமான நீதியான நிருவாக நடைமுறையைக் கையாள்வதற்குரிய அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது இந்த நாட்டின் தலைவர்களுடைய தலையாய கடமையாக இருக்கின்றது.

எனவே இவ்வாறான ஆக்கிரமிப்புப் பணிகள் இத்துடன் நிறுத்தப்பட வேண்டும். சமூகங்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும். அரச காணிகள் பாதுகாக்கப்பட வேண்டும். இங்கு பொதுவான சில மக்களுக்குத் தேவையான கட்டிடங்கள் அமைக்கப்படுகின்ற போது அரச காணிகள் இல்லையெனக் கூறப்படுகின்றது. எனவே இவற்றின் உண்மைத் தன்மை கண்டறியப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

 

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker